Feed Item
·
Added a post

ஒருநாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த அற்புத பக்தியை அறிந்த கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்தார். அவனது பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரம்மன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.

அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். ஆனாலும் அர்ச்சுனனின் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.

தெய்வப்பற்று உடையவர்கள் தம்மை அறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுக்கள் தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. உன்னத நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் முழுமனதோடு பாராட்டினர்.

காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பவன், காந்தியின் தலையில் அடித்த போது ஹேராம்! என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் ஹேராம்! என்றார். கோட்சேயின் குண்டு தனது உயிரையே பறிக்கும் போதும் ஹேராம்! என்றே அவர் வாயானது இறைவன் நாமத்தை உச்சரித்தது.

இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு ஒன்றை இங்கே பார்ப்போம்.

பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் அவருக்கான வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருந்தது. அவர் தொழில் செய்யும் போதும், உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் நடக்கும்போதும் அவர் வாய் தானாகவே விட்டல! விட்டல! என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டுபிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.

இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள். ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது சீடர்கள் திகைத்து நின்றனர்.

அப்போது பெரும் ஞானியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார். அவர்கள் தங்கள் குருவின் எலும்பு கிடைக்கவில்லை என்று கூறினர். அதற்கு அவர், சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து விட்டல! விட்டல! என்ற ஒலி வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம் என்றார் நாம தேவர்.

என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, விட்டல! விட்டல! என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.

வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளரின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சோகாமேளரின் பரமபக்தியையும் அறிந்து கொள்ளலாம்.

புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர். அங்கே தினந்தோறும் விட்டல விட்டல என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

  • 69