முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார்.
அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார்.
அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அது, ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.
அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர்
பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.
மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.
அரசருக்கு தனது அறிவிப்பு நினைவில் வந்தது. "இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
