தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இந்நிறுவனம், துபாய், பெல்ஜியம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை 2-வது இடத்தையும் வென்றுள்ளது.
இந்நிலையில், இத்தாலியின் வெனிஸில் மறைந்த தொழிலதிபரும் கார் பந்தய வீரருமான பிலிப் சாரியோலின் நினைவாக, அஜித் குமாருக்கு 2025-ம் ஆண்டின் ‘ஜென்டில்மேன் டிரைவர் விருது’வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அவருக்கு எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த கவுரவத்தை வழங்கியுள்ளது.
இந்த விருதை பெறுவதற்காக அஜித்குமார் தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மனைவி ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித். இப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.
