ஒரு சிறிய ஊரில் சுடுகாட்டில் வேலை பார்க்கும் வெட்டியான் ஒருவர் இருந்தார். அவர் எந்த நேரமும் சந்தோஷமாக ஆட்டமும், பாட்டமுமாக அங்கும் இங்குமாக ஓடி வேலை பார்ப்பார்.
வார இறுதி நாட்களில் அவர் ஊருக்குள் வரும் சமயம் அவருக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் காசும் தருவார்கள். அதே போல ஒவ்வொரு முறை பிணம் எரியூட்ட வரும் சமயமும் அவர் வாயில் ஒரு பாட்டை சத்தமாக பாடிக் கொண்டே வேலை பார்ப்பார்.
வயதான பெரியவர்கள் இறந்த சமயம் அவர் சந்தோஷமாக பாடுவதை சிலர் கண்டுகொள்ளாவிட்டாலும் கூட துள்ளத் துடிக்க சிறுவயது மரணங்கள், உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள், இணைகளை இழந்தவர்கள் என்று வரும் சமயம் அவர்களால் அந்த பாட்டை அந்த கணத்தில் ரசிக்க இயலவில்லை. அந்தப் பாட்டு இதுதான்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி.
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானடி ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி.
என்றவாறே சத்தமாகப் பாடுவர்.
ஒரு மரணம் நடந்து எரியூட்ட வந்திருக்கும் ஒருவருக்கு எரியட்டும் வெட்டியான் இவ்வளவு சந்தோசமாகவும், சத்தமாகவும் இந்த பாட்டை பாடுவது பிடிக்குமா? பிடிக்காதல்லவா?
அப்படியாக சென்று கொண்டிருந்த சமயம் அவன் வாலிப வயதை அடைந்து அவனுக்கு திருமணம் நடந்தது. சில காலம் வாழ்க்கை வெகு சந்தோசமாக சென்று கொண்டிருந்த சமயம் அவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக கண்ணைகாட்டி, கைகால்களை ஆட்டி,பொக்கை வாய் திறந்தும் சிரித்தும் அவனை கொள்ளை கொண்டது.
பிணங்களை எரியூட்டும் நேரம் தவிர முழு நேரமும் அந்த குழந்தையுடனே ஆனது வாழ்க்கை. ஒரு வயது ஆகும் தருவாயில் அந்த குழந்தைக்கு ஒரு நோய் வந்துவிட்டது. மருத்துவம் செய்து செய்து பலன் இன்றி அந்த குழந்தை இறந்து விடும். அதனை எரியூட்டசெல்லும் சமயம் அவனது வாய் தாமாகவே அந்தப் பாட்டை பாடும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி.
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானடி ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி. என்று.
ஆனால் இந்த முறை சந்தோசமாகவும் சத்தமாகவும் அல்ல! தழுதழுத்த குரலில், குறைவான சத்தத்தில், விம்மி வெடித்து வரும் அழுகையுடன் பாடுவார்.
ஏனென்றால் இப்போதுதான் அந்தப் பாட்டின் உள்ளவரிகளின் அர்த்தம் அவருக்கு புரிந்தது.