“ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் ஜனகராஜ்.
இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் அங்கே கிடைத்தது. உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார். ஆனால் நீ நடிகனாகிடு அதுதான் உனக்கு சரியா வரும் என்று சொல்லி ஜனகராஜை நடிக்க வைத்தவர் பாரதிராஜா தான்.
இவரை அரவணைத்த பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார். முதல் சில படங்களில் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்பாடு முக்கிய காரக்டர் தந்திருப்பார். காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவர் வேடம் தந்தார்.
ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா.
கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த ஏழு பேரையும் அந்த காலகட்டத்தில் செவன் ஸ்டார்ஸ் என்பார்கள்.
இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே சிறப்பானதொரு வேடம் அவர்கள் கதையில் இருக்கும்படியே ஸ்கிரிப்ட் அமைந்திருக்கும்.
ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது “தங்காச்சிய நாய் கச்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்ஷா காரனாக இருந்து பணக்கார வேடத்தில் சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதி ராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..
அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சிறப்பான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் bye சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை எத்தனை மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த ‘தெய்வமே’ இன்ஸ்பெக்டர் காரெக்டர், நாயகனில் கமலின் உயிர் நண்பரான செல்வம், கேரக்டர் மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் குரூர சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ்..
திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் தோனி அடித்ததை விட பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்ய ராஜுடன் கவுண்டமணிக்கு முன்பே சூப்பர் ஹிட் இணை ஜனகராஜ் தான். பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என
அவரையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். இதெல்லாம் அவரது திறமையின் ஒரு துளி தான். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் அவரது செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில்..
ஊட்டிக்கு போகாதிங்க என கத்தும் பைத்தியமாக, இயக்குநர் மணிவண்ணன் தந்த மறக்க முடியாத பாத்திரங்களில் நடித்தவர். கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் இவர் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் பாட்டு வாத்தியாராக கன்னிராசி இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே. இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லை அற்புதமான குணசித்திர நடிகர்.
ஆரம்ப காலத்தில் பாலைவனச் சோலை படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே தெரியும். ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவரது படங்களில் பார்த்தால்..
செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் ஜனகராஜ் இருப்பார். அதிலும் அவரது காரக்டர் மிக அற்புதமாக திரைக் கதையில் எழுதப் பட்டு ஜனகராஜ் நடிப்பில் அது இன்னும் மெருகேறி இருக்கும். கன்னி ராசியில் பாட்டு வாத்தியார், ஆண் பாவத்தில் ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..
நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் சமையல் கார அப்பா என தூள் கிளப்பியிருப்பார். மணிரத்னம் படங்களில் குறிப்பாக நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி..
இதில் நாயகன் படத்தில் கிட்டத்தட்ட 2வது நாயகன் ஜனகராஜ் தான். அந்தப் படம் முழுவதும் ஜனகராஜை கவனியுங்கள் ஒரு காட்பாதரின் நண்பன் பிறகு அவன் செகரட்டரி, வயதான பின்பு அக்குடும்பத்தில் ஒருவன் என ஜனகராஜின் நடிப்பு ஆழ்கடலின் அமைதி போல அற்புதமாக இருக்கும்.
கே.பாலச்சந்தர் படங்களிலும் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும் புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர், அதுவும் அவரது கனவான இளையராஜா குழுவில் வயலின் வாசிப்பவராக நடித்திருப்பார்.
இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம். காமெடி நடிகர்களில் அன்று அதிக தனிப் பாடல்கள் வந்தது ஜனகராஜிற்கு தான்.
ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ். அந்தப் படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என்பார்கள். அப்படி சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ். அதன் பின்பு..
ஜனகராஜிற்கு இளையராஜா அளவிற்கு எவரும் பாடவில்லை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததை தனிப்பதிவாகவே போடலாம். இன்றைக்கும் அது பொருந்தும் அந்த அளவிற்கு கார்ப்பரேட் சாமியார்களை பகடி செய்திருப்பார்.
இதயத்தாமரையில் வரும் அந்த ஞாபமறதி கேரக்டர் ஒரு பிளாக் ஹ்யூமர் வகை நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு சோறு பதமாகும்.
கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய அதே காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்கள் உடனும் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக இருந்தது, ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டார்.
தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில் ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார். சிங்கம் சிங்கிளாத் தான் வரும் என்பது ஜனக ராஜிற்கு மட்டுமே பொருந்தும். தமிழ் சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்!
இவரை இன்றைய பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம். இன்று சோஷியல் மீடியாக்களில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்ஸே போதும்.
அதை அடித்துக் கொள்ள எவரும் இல்லை! ஆம் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தனியொருவன் நமது ஜனகராஜ் ஒருவர் மட்டுமே