Feed Item
·
Added a post

தனது தலையில் வாழைப்பழங்களை சுமந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம், தளர்ந்த உடலுடனும் சோர்வான முகத்துடனும் இருந்த பெரியவர் ஒருவர் எனக்கு பசியாக இருக்கிறது உன்னிடம் இருக்கும் வாழைப்பழங்களை தருவாயா என்று கேட்கிறார்.

உடனடியாக அந்தப் பையனும் மூன்று வாழைப்பழங்களை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுக்கிறான். அதை கையில் வாங்கிப் பார்த்த அந்த முதியவர் இந்தப் பழங்கள் இன்னும் பழுக்கவில்லை இதை எப்படி சாப்பிட்டு நான் பசியாறுவது என்று கேட்கிறார்.

எப்படியாவது முதியவரின் பசியை போக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவன் கொஞ்ச நேரம் காத்திருங்கள். வீட்டில் என்னிடம் பழுத்த வாழைப் பழங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு வேக வேகமாகப் போய் மூன்று பெரிய பழுத்த வாழைப்பழங்களை கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்த பெரியவர் இந்த பழங்கள் அதிகமாக கனிந்து போய் இருக்கின்றன இதை நான் எப்படி சாப்பிடுவது என்று மீண்டும் அந்தப் பையனிடம் கோபித்துக் கொண்டார்.

இப்போதும் தான் நினைத்த மாதிரி பழங்களை கொடுத்து அந்த முதியவரின் பசியை ஆற்ற முடியவில்லை என்று பரிதவித்த அந்த சிறுவனிடம் மீண்டும் போய் அந்த பழுக்காத பழங்களையாவது எடுத்து வா நாளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக்கு கால் வலிக்கிறது, சீக்கிரமாக வா என்று சொல்கிறார்.

மீண்டும் வீட்டிற்கு ஓடி முன்பு கொடுத்த பழங்களையே எடுத்துக் கொண்டு சிறுவன் திரும்பி வருகிறான்.. நீ ரொம்ப மெதுவாக எல்லா வேலைகளையும் செய்கிறாய்.. இவ்வளவு நேரம் ஆக்கிவிட்டாய்.. எனக்கு வாழைப்பழம் சாப்பிடும் ஆசையே போய்விட்டது உன் பழங்களை எடுத்துக் கொண்டு போ என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் அந்த சிறுவனின் முகம் வாடி விடுகிறது அப்போது அந்த பெரியவர் தனது தோள்களை குலுக்கி சிறுவனைப் பார்த்து லேசாக சிரித்தார். அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் சிறுவன் முழித்தான்.

அமைதியான புன்னகையுடன் அந்த பெரியவர் சிறுவனைப் பார்த்து வாழ்வின் மதிப்பு மிக்க பாடங்களை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள முடியும்..

உனக்கு ஒன்று தெரியுமா நீ கொடுத்த பழங்கள் எல்லாமே நல்ல பழங்கள் தான். ஆனால் நான் தான் நன்றி கெட்டத்தனமாக உன்னை வேண்டுமென்றே அலைய வைத்து அதன் மூலம் உனக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.

என் வாழ்க்கையில் நான் மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை உனக்கு இந்த சிறு வயதிலேயே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்தினேன்.

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்காதே.. உன்னைச் சுற்றி இருப்பவர்கள் நீ என்ன செய்தாலும் முழுமையாக திருப்தி அடைய மாட்டார்கள் உன் செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நீ எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்தி படுத்த முடியாது என்பதை உணராமல் இருந்தால் உன் மன அமைதியை இழப்பாய், உன் கனவுகளையும் லட்சியத்தையும் இழந்து உன் வாழ்வு தான் பாதிக்கப்படும். நீ தரையில் படுத்துக்கொண்டு என் மேலே நடந்து செல்லுங்கள் என்று சொன்னால் கூட உன் மீது நடப்பதற்கு எங்களுக்கு வசதியாக இல்லை என்று தான் கூறுவார்கள். எனவே அடுத்தவர்களை திருப்தி படுத்துவதற்காகவே உன்னுடைய வாழ்க்கையை நீ வாழாதே.! நீ நீயாக இரு.! உன் கடமைகளை சரியாகவும் நியாயமாகவும் செய் அதன்பிறகும் உன்னை பிறர் குறை கூறினால் அதற்காக வருந்தாதே என்று சொன்னார்..!

  • 28