1970-களில் இந்தி திரையுலகில் டாப் ஸ்டாராய் ஜொலித்த நடிகை பர்வீன் பாபியும் அப்படிப்பட்ட பரிதாப லிஸ்ட்டில் ஒருவர் தான். அழகிய நட்சத்திரம் எரிந்து சாம்பலாகிப்போன கதை..
டீன் ஏஜ் வயதில் கதாநாயகி ஆகாமல் இருபத்தைந்தை நெருங்கும்போதுதான் திரைக்கு வந்து சேர்ந்தார் பர்வீன்.
50-களிலும் 60-களிலும் கிளாமர் விஷயத்தில் இந்தி திரை உலகமே தட்டு தடுமாறிக் கொண்டிருந்த சமயம்.
அப்போது நடை உடை பாவனைகளில் கிளாமர் வித் ஸ்டைல் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு பாலிவுட்டை கொண்டு போன நடிகைகள், ஜீனத் அமன், நீத்து சிங் மற்றும் பர்வீன் பாபி.
மனைவி ஜெயாவுக்கு அடுத்து அமிதாப்பச்சன் அதிகமாக தனக்கு படங்களில் ஜோடியாய் சேர்த்துக்கொண்டது பர்வீன் பாபியைத்தான்.
மஜ்பூர், தீவார், அமர் அக்பர் ஆண்டனி, நமக் ஹலால், காலியா மஹான், காலா பத்தர், ஷான் என போகும் அந்த பட்டியல். எல்லா படங்களும் மெகா ஹிட்.
அதிலும் இந்தி திரையுலகின் மெகா பிளாக் பஸ்டரான தீவார் படம் (தமிழில் ரஜினி நடித்த தீ) அமிதாப்புக்கு மட்டுமல்ல பர்வீனுக்கும் ஒரு மைல்கல்.
இன்னொரு ஹீரோயின் நீத்துசிங்குடன் கிளாமரில் போட்டி போடவேண்டிய நிலையில், அற்புதமான நடிப்பாலும் கிளாப்சை அள்ளிக்கொண்டு போவார் பர்வீன்.
அதிலும் வில்லனால் சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அமிதாப் ஓடிவருவார். அமிதாப் கரங்களில் அழுதபடியே பர்வீன் பாபி உயிரை விடும்போது தியேட்டரே நிசப்தமாகிவிடும்.
படத்தில் பர்வீன்பாபியை எந்த அளவுக்கு கதாநாயகன் நேசித்திருக்கிறான் என்பதை காட்டும் வகையில் காட்சிகள் ஓடும்.. பர்வீன் உயிர்போனதுமே வில்லன் இடத்தை தேடிப்போய் சராமாரியாக அனைவரையும் சுட்டுத்தள்ளுவார் அமிதாப்.
பர்வீனை கொன்ற வில்லனை அடித்து உதைத்து கடைசியில் குண்டுக்கட்டாக தூக்கி பல பலமாடி கட்டிடத்திலிருந்து ஜன்னல் வழியாகவீசியே கொன்று விடுவார் அமிதாப்.. (தளபதி படத்தில் மம்முட்டியை கொன்ற வில்லன் கரிவரதனை ரஜினி உடனே வெறியோடு தேடிப்போகும் சீன் இங்கிருந்து உருவப்பட்டதுதான்) அந்த அளவுக்கு தீவாரில் அமிதாப் -பர்வீன்பாபி அட்டாச்மெண்ட் கெமிஸ்ட்ரி கரைபுரளும்.
ஷான் படத்தில் அவர் தோன்றும் பியார் கர்னே வாலா பாட்டெல்லாம் ஒரு காலத்தில் தேசிய கீதம்போல இருந்தது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தில் தகதகவென மின்னிய பர்வீன்பாபி, இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு திடீரென மர்ம தேசத்து மகராணியாகிப்போனார்.
படஉலகைவிட்டு விலகினார், அமெரிக்கா போனார், வலம் வந்தார், ஏர்போர்ட்டில் உரிய ஆவணங்களை காட்டமுடியாமல் கண்டபடி உளறி மனநோய் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்திய அரசே நேரடியாக தலையிட்டு மீட்டுவந்தது. மறுபடியும், அமெரிக்க அதிபர் உட்பட உலகத்தலை வர்கள் தன்னைக்கொல்ல சதி செய்வதாக சொல்ல சாரி, பிதற்ற ஆரம்பித்தார்.
அமிதாப்பச்சனை, அண்டர் கிரவுண்ட் தாதா என்று குற்றம் சாட்டினார். எல்லாவற்றையும்விட, நோய்வாய் பட்டு வீல் சேரே கதியானார்
கடைசியில் மும்பை வீட்டில் 2005 ஜனவரி 22-ந்தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மூன்று நாட்களாக பால்பாக்கெட்டுகள், டெய்லி பேப்பர்கள் எடுக்கப் படாமல் வீடு மூடியே கிடைந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் சொன்னார்கள்.
போலீசார் வந்து பார்த்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பர்வீன் பாபி, வீல் சேரிலிருந்து விழுந்து இறந்துபோய், சடலம் அழுகிக்கொண்டிருந்தது.
பிரேத பரிசோதனையில்தான் ஜனவரி 20ந்தேதியே பர்வீன்பாபி இறந்துவிட்டது தெரியவந்தது. (இந்தப் பதிவு ஏன் என்று இப்போது புரிகிறதா?)
காதல் தோல்வி, மாபியா கேங் பிடியில் அடிமையாக சிக்கினார் என பர்வீன் பாபி வரலாற்றில் பல பக்கங்கள் செவி வழிச்செய்தியாகவே இருந்தன.
1940களில் லேடி சூப்பர் ஸ்டராக விளங்கிய தங்கத்தாரகை நடிகை சுரையாவும் தேவ் ஆனந்த்துடனான காதல் தோல்வியால், இப்படித்தான் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ஒற்றை ஆளாய் அவ்வளவு பெரிய பங்களாவில் அனாதையாக இறந்துபோனார். அவரது சடலமும் சில நாட்கள் கேட்பாரற்று கிடந்தது..
சராசரி ஆட்களுக்கு கிடைக்கும் கௌரவமான மரணம்கூட, நாடே வியந்த பிரபலங்களுக்கு சில நேரம் கிடைப்பதில்லை..
காலத்தின் கைகளில்தான் எத்தனை வகையான கோலங்கள், அலங்கோலங்கள் உள்பட!
