Feed Item
·
Added a news

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீட்டில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.

அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார். தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், அங்கு தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அத்துடன், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தூர்.

தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது. வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.

வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் பிழைக்கவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

  • 32