Feed Item
·
Added a post

ஒரு மாலை நேரம்...

நகரத்தின் பரபரப்பான பேருந்து நிலையம் அருகே, சிறிய மர நிழலில் அமர்ந்து காலணிகள் தைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

வயது அறுபதைக் கடந்திருந்தாலும், அவரது கைகளில் இன்னும் உறுதி இருந்தது.

கிழிந்த காலணிகளைத் தைத்து, மீண்டும் நடக்க வைப்பதுதான் அவரது தொழில்.

அன்று ஒரு இளைஞன் வேகமாக வந்து நின்றான்.

அவனுடைய காலணியின் அடிப்பகுதி கிழிந்திருந்தது.

"பெரியவரே!... இதைத் தைக்க முடியுமா?" என்றான்.

முதியவர் காலணியைப் பார்த்தார்.

பிறகு இளைஞனின் முகத்தைப் பார்த்தார்.

காலணியைவிட அவன் மனம்தான் அதிகமாகக் கிழிந்திருந்தது முகத்தை பார்த்ததுமே புரிந்தது.

"உட்கார் தம்பி ..." என்றார்.

அமைதியாக ஊசியையும் நூலையும் எடுத்தார்.

தைத்துக் கொண்டே கேட்டார்...

"ஏதோ விரக்தியா இருக்கிற மாதிரி தெரியுதே?"

அவ்வளவுதான்...

இளைஞன் உடைந்து போய் பேசினான்.

"வேலை போய்விட்டது...

நண்பர்கள் விலகிவிட்டார்கள்...

வீட்டில் கடன்... நான் தோற்றுவிட்டேன்...

இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை..."

முதியவர் எதுவும் பேசவில்லை.

தைத்துக் கொண்டே இருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து...

கிழிந்திருந்த காலணியை அவன் முன் வைத்தார்.

"இதோ... இன்னும் ஒரு வருஷம் இது உழைக்கும்."

"பெரியவரே... இவ்வளவு கிழிந்திருந்த செருப்பை தூக்கி போடுன்னு சொல்வீங்கன்னு நெனெச்சேன்...நல்லா சரி பண்ணிட்டீங்க... தேங்ஸ்"

முதியவர் மெதுவாகச் சிரித்தார்.

"அதைத்தான் நானும் உன்னிடம் கேட்கப் போகிறேன் தம்பி ...

கிழிந்த செருப்பைச் சரி செய்யலாம் என்று நம்பி வந்த நீ...

காயமடைந்த வாழ்க்கையை மட்டும் ஏன் சரிசெய்ய முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

அந்த வார்த்தைகள் இளைஞனை அமைதியாக்கின.

முதியவர் அருகில் இருந்த பழைய மரப்பெட்டியைத் திறந்தார்.

அதில் ஒரு பழைய ஊசியும்...

பல ஆண்டுகள் பயன்படுத்திய தோல் சுத்தியலும்...

மஞ்சள் நிறம் படிந்த ஒரு குறிப்பேடும் இருந்தது.

அதை இளைஞனிடம் கொடுத்தார்.

"இதில் என் வாழ்க்கை இருக்கிறது...

படி..."

ஒரு பதிவு...

"ஒரு விபத்தில் என் வலது கை விரல்கள் இரண்டு போய்விட்டன.

'இனி இந்தத் தொழில் உன்னால் முடியாது' என்று எல்லோரும் சொன்னார்கள்.

ஆனால் நான் விரலை இழந்தேன்... தொழிலை இழக்கவில்லை.

மீண்டும் ஊசியைப் பிடிக்க கற்றுக்கொண்டேன்."

இன்னொரு பதிவு...

"என் மனைவி உடல்நலக் குறைவால் இறந்தபோது... இரண்டு சிறு குழந்தைகள் என் முன்னால் நின்றார்கள்.

அவர்களைப் பார்த்து அழ வேண்டும் போல் இருந்தது... ஆனால் வாழ வேண்டிய பொறுப்பு அதைவிட பெரியதாக இருந்தது.

பகலில் காலணி தைத்தேன்... இரவில் குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களைப் பார்த்தேன்.

இன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக நிற்கிறார்கள்."

மற்றொரு பதிவு...

"இந்த நாற்காலியில் அமர்ந்து ஆயிரக்கணக்கான காலணிகளைத் தைத்திருக்கிறேன்.

அப்போது ஒரு விஷயம் புரிந்தது.

கிழிவது தவறல்ல.... அதை தைக்க மறுப்பதுதான் தவறு.

"செருப்புக்கும் அது பொருந்தும்...

வாழ்க்கைக்கும் அது பொருந்தும்."

குறிப்பேட்டை மூடிய இளைஞன் அமைதியாக இருந்தான்.

முதியவர் அவன் தோளில் கை வைத்தார். "தம்பி... கிழிந்த காலணியைத் தூக்கி எறிவது எளிது.

ஆனால் அதைச் சரிசெய்து மீண்டும் நடப்பதுதான் புத்திசாலித்தனம்.

வாழ்க்கையும் அப்படித்தான்.

ஒரு வேலை போகலாம்.

ஒரு உறவு முடிந்து போகலாம்.

பணம் குறையலாம்.

ஆனால்...

உன் மனம் மட்டும் உடைந்து போகக் கூடாது.

ஏனெனில்...

உடைந்த மனதையும் தைக்க முடியும்.

அதற்கான நூல்... "நம்பிக்கை".

அதற்கான ஊசி..."முயற்சி".

அதற்கான கைகள்..."தைரியம்."

இளைஞன் காலணியை அணிந்தான்.

அது முன்பைவிட உறுதியாக இருந்தது.

அவன் நடக்கத் தொடங்கினான்.

அந்த நாள் அவன் புரிந்து கொண்டான்...

தோல்விகள் வாழ்க்கையின் முடிவு அல்ல...

சரிசெய்ய வேண்டிய இடங்களைக் காட்டும் அடையாளங்கள் மட்டுமே.

அந்த நாள்... கிழிந்த காலணியுடன் வந்த இளைஞன், தைக்கப்பட்ட காலணியுடன் மட்டுமல்ல...

தைக்கப்பட்ட மனதுடனும் அங்கிருந்து நடந்தான்.

காலம் கடந்தது...

வாழ்க்கை அவனுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தது.

புதிய வேலை கிடைத்தது.

முயற்சிகள் பலன் தந்தன.

பதவிகள் உயர்ந்தன.

ஒரு நாள்...

அவன் சொந்த காரில் அதே வழியாக வந்தான்.

மரத்தடியில் அதே முதியவர்...

அதே நாற்காலி...

அதே ஊசி...

அதே புன்னகை...

காரை ஓரமாக நிறுத்தினான்.

முதியவர் சிரித்தபடி,

"செருப்பு தைக்கணுமா?" என்று கேட்டார்.

அவன் சிரித்தான்.

"இல்லை பெரியவரே...இன்று தைக்க வரவில்லை... மனம் சோர்ந்து போகாமல் இருக்க...இரண்டு நிமிடம் உங்களோடு பேசிவிட்டுப் போக வந்தேன்."

அன்று முதல்...

அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம், அவன் இரண்டு நிமிடம் அந்த முதியவருடன் அமர்ந்து பேசிவிட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.

சில நேரங்களில் அருகிலிருந்த டீக்கடையில் இருந்து இரண்டு டீ வாங்கி வருவான்.

ஒன்று அவனுக்கு...

ஒன்று அந்த முதியவருக்கு...

வாழ்க்கையில் சில மனிதர்கள்...

நம் பாதையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாக இருப்பார்கள்.

ஆனால்...

நம் வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கற்களாக மாறிவிடுவார்கள்.

  • 28