ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடித்து வந்தார். இப்படத்தினை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
இப்படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் டைட்டில் லுக்கை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கெளரி ப்ரியா, ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “’ஹேப்பி ராஜ்’” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது. சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். என் நாயகனுக்கு ‘ஹேப்பி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும்.
முழுக் கதையிலும் ‘ஹேப்பி’என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றது. இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது; அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது. "ஹேப்பி ராஜ்" படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமையும்; மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பு” என தெரிவித்தார்.
’ஹேப்பி ராஜ்’ படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரிந்து வருகிறார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஹேப்பி ராஜ்’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.