நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் நடைபெறும் நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி 12-ஆம் வகுப்பை இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு செய்து விட்டு, நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த இரு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த முறையும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சம் தான் அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் 12-ஆம் வகுப்புத் தேர்வை முடித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார்.
ஆனால், அதில் அவரால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாத நிலையில் நடப்பாண்டிலும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சத்தால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களைக் கொல்லும் தேர்வு என்பதற்கு இவை தான் மோசமான எடுத்துக்காட்டு.
ஏற்கனவே, கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா, 19-ஆம் தேதி சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா என இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த இரு நிகழவுகளையும் சேர்த்து 4 நாள்களில் 4 மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு பலி கொடுத்திருக்கிறோம். இந்தக் கொடுமை தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
