Feed Item
·
Added a news

கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான விமானம் 'டர்போ கமாண்டர் 690' ரகத்தைச் சேர்ந்ததாகும். இது காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை வான்வழியாகக் கண்காணித்து, வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

புதன்கிழமை இரவு, யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விமானம் குறித்த நேரத்தில் வந்து சேராததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், சமூகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் பிராந்திய மரண பரிசோதனைத் துறையும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

விபத்துக்குள்ளான விமானத்தை 'பஃபலோ ஏர்வேஸ்' என்ற நிறுவனம் இயக்கி வந்தது. மார்டன் ஹில்ஸ் பகுதியில் பரவி வந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இயற்கையான காரணங்களால் உருவான இந்த காட்டுத்தீ, சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு கட்டுப்பாடின்றி எரிந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 25