Feed Item
·
Added a news

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை வேகமாக அதிகரித்து வரும் போதிலும், போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை அதிகளவிலான ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் தடுப்பதாகத் துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சஸ்காட்செவன் வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் (SADA) சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் EV பதிவுகள் 3,408 ஆக உயர்ந்துள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (3,059 வாகனங்கள்) ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீத வளர்ச்சியாகும். தொழில்நுட்பம் வளர வளர, மக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என சஸ்காட்செவன் வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் லாரி ஹெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடா முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 21,500 க்கும் மேற்பட்ட பூஜ்ஜிய-உமிழ்வு (Zero-emission) வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75 சதவீத வளர்ச்சியாகும் என கனடா புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வழங்கும் 5,000 டாலர் வரையிலான தள்ளுபடி சலுகைகள், சந்தைக்கு வரும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவையே இந்த விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

  • 34