சுந்தர்.சி இயக்கத்தில், மதகஜராஜா, ஆம்பள, ஆக் ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் விஷால். இதில் மதகஜராஜா, ஆம்பள ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. ‘மதகஜராஜா’, படம் உருவாகி 12 வருடத்துக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து சுந்தர்.சி, விஷால் மீண்டும் இணையும் படம் ‘புருஷன்’.
இதன் டைட்டில் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆக் ஷன் கலந்த காமெடி கதைக் களத்துடன் உருவாகும் இப்படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் சார்பாக குஷ்புவும் அவரது மகள் அனந்திதாவும் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி .2-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருந்தது. இதற்காக சுந்தர்.சி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அங்கு செல்ல இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுந்தர். சி-க்கு உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.