காரைநகர் எனப்படும் காரைதீவு
காரைதீவு என்ற பெயர் 12 /09/1923 அன்று உத்தியோக பூர்வமாகக் காரைநகர் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயர் மாற்றத்தின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் முதற்தீவாகிய அருள் வளம் ,பொருள் வளம் ,தெருள் வளம் நிறைந்த காரைநகர் இலங்கைத்தீவின் தலையாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கின்றது .
ஏராளமான காரைச்செடிகள் வளர்ந்து நின்ற காரணத்தினாலே காரைதீவு எனப்பெயர் பெற்றதாக சில குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது .
புத்த சாதகக் கதைகளில் இவ்வூரின் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம் எனப் பெரியோர் கூறுவர் . அதேபோன்று மணி மேகலையில் சொல்லப்படும் மணி பல்லவம் என்ற தீவும் காரைநகர் தான் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களால் சொல்லப்படுகிறது.
யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் இந்தியாவின் காரைக்குடியில் இருந்து வந்தமக்கள் காரைதீவில் குடியேறினார்கள் என்று கூறுகிறது .இதனை மேற்கோள் காட்டும் சிலர் காரைக்குடியில் இருந்து வந்து மக்கள் குடியேறியதால் தான் இவ்வூருக்கு காரைதீவு என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள் .
காரைநகரை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1869 ஆம் ஆண்டில் அப்போது யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையின் ஆணையின் பேரில் பொறியியலாளர் ஆம்ஸ்ரோங் அவர்களால் பொன்னாலைக் கடலூடாக அமைக்கப்பட்டதாக குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன .இப்பாலம் அமைக்கப்பட்டால் தான் மக்கள் காரைதீவைக் காரைநகர் என அழைக்கத்தொடங்கினர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
தட்சிண கைலாசபுராணம் பதிப்பித்த சிவசிதம்பர ஐயர் என்பவர் 1887 ல் காரைநகர் என்ற பெயரைத் தமதுரையில் பயன்படுத்தியுள்ளார் என அறியவருகின்றது .
இவருக்கு முன்பே இவரின் தந்தையார் ஆகிய கார்த்திகேயப்புலவர் தான் இயற்றிய திண்ணபுரத்திரிபந்தாதி என்னும் நூலின் காப்புச் செய்யுளில் காரைநகர் என இவ்வூரின் பெயரை குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம் . எனவே பொன்னாலைப் பாலம் அமைப்பதற்கு முன்பே காரைநகர் என்ற சொல் பயன்பட்டிருப்பதனை அறியக்கூடிய உள்ளது.
எனினும் 12-09-1923 முதலே அரச ஆணைப்படி இவ்வூர் காரைநகர் என அழைக்கப்படுகிறது. இந்த அரசாணைக்குக் காரணமாக 1922 ல் சேர். பொன். இராமநாதன் அவர்கள் இங்கு மேற்கொண்ட வருகை இருந்ததாக சில பெரியோர் கூறுவர்.
எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற்கும் இடையில் பெயர்காரணமாக தபால் துறையினரின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தவிர்ப்பதற்காக யாழின் காரைதீவு காரைநகராகப் பெயர்மாற்றம் பெற்றதாகக் கருதுவோரும் உள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் ஏறத்தாழ நூறு வருடங்களாக ( 1923 இல் இருந்து) காரைதீவு என்பது காரைநகர் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதைக் காணலாம்.
ஆலயங்களும், மடங்களும் ,வயல்களும் , தோட்டங்களும் ,தோப்புகளும், குளங்களும், கேணிகளும் நிறைந்த அதாவது கடல் வளமும், நீர் வளமும், நிலவளமும் நிறைந்த காரைநகர் விருந்தோம்பலிற்குப் பெயர் போனது . காரைநகரின் விருந்தோம்பலை 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் மிக்க கவிஞரான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்
"காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும்
ஊராருக் கன்றி மற்றையோர்க் குவப்பில்லை-பார்மீதில்
தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம்
எங்கே போய்க்காண்பேன் இனி"
விருந்தோம்பலிற் சிறந்து விளங்கிய காரைநகர் மக்கள் வணிகத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள் .இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் வணிகர்களாக விளங்கினார்கள் இன்றும் விளங்குகிறார்கள் . பேரிடர் வந்த போதும் போரிடர் வந்த போதும் பஞ்சம் வராமல் பொருட்களுக்கு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டதில் இவர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
இலங்கையில் மட்டுமல்லாது தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கூட சிறந்த வணிகர்களாக விளங்குகிறார்கள். பல வெற்றிகரமான நிறுவனங்கள் இவர்களால் இயக்கப்படுகின்றன.
வணிகத்துறையில் மட்டுமல்லாது கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினார்கள், விளங்குகின்றார்கள் .பல கல்விமான்கள் , அறிஞர்கள் ,கலைஞர்கள், புலவர்கள் , வித்துவான்கள் ,பண்டிதர்கள் ,நிர்வாக அதிகாரிகள் ,பொறியியலாளர்கள் ,மருத்துவர்கள் சட்டத்தரணிகள் ,நீதியரசர்கள் , ஆசிரியர்கள் , ஏனையவகை அதிகாரிகள் ,முகாமையாளர்கள் ,விஞ்ஞானிகள் ,மெஞ்ஞானிகள் ,அரசியலாளர்கள் என்று பலரும் இவ்வூரில் இருந்து தோன்றினார்கள் இன்றும் தோன்றுகின்றார்கள் .
இலங்கையில் மட்டுமல்லாது உலகம் பூராவும் இவர்கள் பணியாற்றினார்கள் , இன்றும் பணியாற்றுகின்றார்கள் .இத்தகையவர்கள் காரணமாக கரைநகரானது இன்றும் தன் புகழ் மங்காது இருப்பதைக் காணலாம்.
-காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்களின் ஆக்கத்தை பிரதி செய்யபட்டது