ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதியினால் மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று கடந்த தினம் நியமிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் குறித்த அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.