கர்நாடகத்தில் 1,454 கிராமங்களில் மயானங்கள் இல்லை
கர்நாடகத்தில் மயானங்கள் இல்லாத கிராமங்களில் மயானங்கள் அமைக்கவும், அதற்கு தேவையான இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. பெங்களூருவை சேர்ந்த முகமது இக்பால் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான வழக்கில் மாநிலத்தில் மயானங்கள் இல்லாத கிராமங்கள் பற்றியும், மயானங்கள் அமைத்து கொடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஐகோர்ட்டுக்கு அறிக்கை அளிக்கும்படி தலைமை நீதிபதி கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி விசாரணையின் போது அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் தலைமை நீதிபதி அலோக் ஆரோதே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக உள்ள 31 மாவட்டங்களிலும் 29 ஆயிரத்து 616 கிராமங்கள் உள்ளன. இதில், 27 ஆயிரத்து 99 கிராமங்களில் மயானங்கள் இருக்கிறது. மீதி உள்ள 1,454 கிராமங்களில் மயானங்கள் இல்லை. பெங்களூரு மாவட்டத்தை பொறுத்தவரையில் 813 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 760 கிராமங்களில் மயானங்கள் இருக்கிறது. மீதி 53 கிராமங்களில் மயானங்கள் இல்லை. அந்த 53 கிராமங்களில், 28 கிராமங்களில் மயானங்கள் அமைக்க அரசிடம் நில வசதி இல்லாததால், பக்கத்து கிராமங்களில் இருக்கும் மயானங்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்கள் பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வருவதால், மின்மயானங்களை பயன்படுத்த கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மயானங்கள் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக நிலம் ஒதுக்க நடவடிக்ககை எடுக்கும்படி அரசுக்கு, தலைமை நீதிபதி அலோக் ஆராதே உத்தரவிட்டுள்ளார்.