மியான்மரில் முன்னாள் எம்.பி. உள்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மியான்மர் ராணுவம் முந்தைய அரசின் எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்களை பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைந்தது. அந்த வகையில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் ஆட்சியில் எம்.பி.யாக இருந்த பியோ ஜெயா தாவ், ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணுவம் அவரை கைது செய்தது. அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக கூறி ஜனநாயக ஆர்வலரான கோ ஜிம்மி என்பவரையும், ராணுவ உளவாளியாக எரித்துக்கொன்றதாக ஹலா மியோ ஆங் மற்றும் ஆங் துரா சாவ் ஆகிய இருவரையும் ராணுவம் கைது செய்தது.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த மியான்மர் ராணுவ கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 4 பேரையும் குற்றவாளியாக அறிவித்தது. மரண தண்டனை நிறைவேற்றம் ஐ.நா. வல்லுநர்கள் மற்றும் கம்போடியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்த அரசியல் கைதிகள் 4 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மியான்மர் ராணுவத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பியோ ஜெயா தாவ் உள்பட 4 பேரையும் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. எனினும் அவர்களது மரண தண்டனை எங்கு, எப்போது நிறைவேற்றப்பட்டது என்பதை மியான்மர் ராணுவம் தெரிவிக்கவில்லை. மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும்.