
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (12) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஒருங்கமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடற்றொழில் உதவி பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் சில பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.