
மோடியின் இலங்கை விஜயம் நெருக்கடி தீர உதவுமா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ஏற்கெனவே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த இரு தலைவர்களின் சந்திப்பு சமீபத்தில் டெல்லியில் நடந்த பிறகு பீரிஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் பீரிஸை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவிற்கும்; இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து கேந்திர கூட்டாளி உறவாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.