
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு காரணம் இதுதான்! - சுமந்திரன்
ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.
அவர்களுடைய லட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம்.
இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம். வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன்.