
சிறிதரனின் உரைக்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு
இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் உரைக்கு அரசாங்க தரப்பினரால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் வரிச்சட்டங்கள் தொடர்பிலே விவாதங்கள் இடம்பெற்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலை, நவாலிப் படுகொலை, செம்மணி படுகொலை, செஞ்சோலைப் படுகொலை என பட்டியலிட்டு உரையாற்றிய போதே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் அவர் உரையாற்றிய போது இடைஇடையே குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் தொடர்ந்தும் உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவரது உரையில், "கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது.
சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலை செய்த இந்த இனவெறி அரசின் உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது. காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராகவும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத் தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில் கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின் வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்." என தெரிவித்து உரையாற்றிய பொழுது தொடர்ந்தும் உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது.