
சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்
நாங்கள் கடன் பொறி ஒன்றில் அகப்பட்டுள்ளோம். அதில் இருந்து மீள வழிதேடாமல் அரசியல் பேசிக் கொண்டே காலம் கடத்தி வருகின்றோம். எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள் என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2020ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் மனவருத்தத்துடன் தான் நான் 2020ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கை பற்றிய விவாதத்தில் பேச எழுந்துள்ளேன். இதுவரை காலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோம். ஏதாவது ஒரு சர்வதேச கடனை உரியவாறு உரிய நேரத்தில் கட்டாது விட்டால் அது மற்றைய சகல கடன்களையும் பாதிக்கும். அவ்வாறு நடந்தால் அது மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுக்கும்.
எமது கடன்காரர்கள் யாவரும் உடனே தமது கடன்களை முழுமையாக நாங்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்று கேட்பார்கள். அதே நேரத்தில் அவற்றைக் கட்ட எம்மால் வேறு கடன்களைப் பெற முடியாத ஒரு ஆபத்து நிலை ஏற்படும். உண்மையில் எமக்குக் கடன்தர எவரும் முன்வரமாட்டார்கள். சீனா போன்ற ஒரு நாட்டின் அடிமை நாடாகவன்றி எம்மால் தனித்தியங்க முடியாமல் போய்விடும்.
சீன கம்யூனிசக் கட்சியின் 100வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக் கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில் மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம்; ஈடுபடுகின்றோமோ? நான் அறியேன் என்று கூறினார்.