உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.
ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.
இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
இங்கு மூன்று மூர்த்தங்கள்....
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை , தீர்த்தமும் இங்கே பச்சை, விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.
கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….
மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்
இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன் – மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி... இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.
இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.
அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…
இங்கே தான்...
இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது
இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…
இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.
இதுதான் கோவில் உருவான வரலாறு.
கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…
அதுதான் தாழம் பூ.
நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,
பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.
நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.
ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.
பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
இத்தலத்திற்கு எப்படி செல்வது?
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
- 1333