Feed Item
Added a post 

சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் வெற்றி பெற்று  தங்கப்பதக்கம் வென்ற கனேஸ் இந்துகாதேவி குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் வெற்றி பெற்று முல்லைத்தீவு மாணவி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கனேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பிரதேசத்தின் புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் பெரும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கனேஸ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.கடந்த வாரம் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் கொடுத்துள்ளார். இவ்வாறு சர்வதேச போட்டியில் வென்று சாதனை படைத்துள்ள இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இவரது வெற்றிக்கு பின்னால் உள்ள வலிகளும் வேதனைகளும் ஏராளம் பாறையொன்றில் முளைத்த பயிர் போல என அவரோடு உரையாடிய போது உணரமுடிந்தது.

கிளிநொச்சியிலிருந்து ஏ-9 வீதியால் சென்று மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணிக்கும் போது கரிப்பட்டமுறிப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது முன்னைய காலத்தில் பெண் யானை இறந்ததால் கரிப்பட்ட முறிப்பு என்று  பெயர் வந்ததாக அந்த ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது முன்னைய காலத்தில் மிகவும் வலிமை கொண்ட ஓர் ஆண் யானையும் பெண் யானையும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் இதில் ஆண் யானை முதலில் இறந்து விட்டதாகவும் அதன் பின்னர் கவலையடைந்த பெண் யானையும் இறந்ததாகவும் ஆண் யானை இறந்த இடம் மணவாளன் பட்டமுறிப்பு என்றும் பெண் யானை இறந்த இடம் கரிப்பட்ட முறிப்பு என்று பெயர் வந்ததாக இந்த ஊர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழர் வரலாற்றிலும் சாதணை படைத்த இடமென்றே கூறமுடியும் இப்படியான வரலாறு கொண்ட மண்ணில் இருந்து தன் அயராத உழைப்பால் சாதனை படைத்த இந்துகாதேவி இப்படியான கிராமத்தின் பிரதான வீதியிலிருந்து ஏறத்தாள மூன்றரைக் கிலோமீற்றர் தொலைவிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட புதியநகர் கிராமத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் கனேஸ் இந்துகாதேவியும் அவரது தாயாரும் வசித்து வருகின்றனர்.குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெறும் வரையும் யாரும் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்றும் இப்போது அவரைத் தேடி எத்தனையோ பேர் செல்வதை காணமுடிகின்றது.

குன்றும் குழியும் செம்மண் புழுதியுமாக காணப்படுகின்ற வீதியூடாக போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத புதிய நகர் கிராமத்தில் கடைசியில் அமைந்துள்ள தன்வீட்டிலிருந்து மூன்றரை கிலோமீட்டர் கால்நடையாக சென்று அதிலிருந்து பேருந்துக்காக காத்திருந்து பேருந்தில் ஏறி பயணம் செய்து பயிற்சி பெற்று இன்று இந்த சாதனை படைத்திருக்கிறார்.சிறுவயதில் தன்னுடைய தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த இந்துகா தேவி வறுமையிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்த சாதனைகளை இப்போது எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நாட்டில் ஏற்பட்ட வன்செயல் காரணமாகஇடம் பெயர்ந்து வவுனியா சிதம்பரபுரத்தில் தங்கியிருந்தனர்.இவரது தந்தையார் விபத்தொன்றில் உயிரிழந்த நிலையில் இந்துகாதேவி சிறு குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் தேடிச்சென்ற நிலையில் அவரது பேத்தியாருடன் சிறு பராயத்தை கழித்ததுடன் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்று கடந்த 2013 ஆம் ஆண்டு 08ம் தரத்தில் கரிப்பட்ட முறிப்பு பாடசாலையில் தன்னுடைய கல்வியை மூன்றரைக் கிலோமீட்டர் கால்நடையாக சென்று கல்வி கற்று பின்னர் தன்னுடைய உயர்கல்வியை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது வெற்றி தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், முதன்முதலில் சர்வதேச மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வைத்திருக்கின்றேன் இதற்கு நிறையவே கஸ்ரப்பட்டிருக்கின்றேன்.  நிதி உதவி கிடைக்காமல் அதற்காக நிறைய அரசியல்வாதிகளிடமும்; பெரியவர்களிடமும் கதைத்திருந்தேன். எந்த உதவிகளும் கிடைக்கவில்லை கடைசியாக இந்த போட்டிக்கு போவதில்லை என்ற முடிவு எடுத்திருந்தேன்.  கடைசி நேரத்தில் 13 ம்திகதி பாகிஸ்தான் பயணிக்க வேண்டும் 3 லட்சம் எவ்வளவோ சிரம பட்டு கட்டிய நிலையில் இன்னும் 90000 (தொன்னுராயிரம்) தேவைபடுகிறது. சிறு துளி பெரு வெள்ளம். உதவிடும் உறவுகளின் கவனத்திற்கு என ஜனவரி மாதம் 10ந் திகதி வவுனியாவிலுள்ள தமிழ்விருட்சம் அமைப்பின் நிறுவுனர் செல்வராஜா சந்திரகுமார் கண்ணன், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்த நிலையில் இதனை ஏற்று வவுனியா 93. 96 மகாவித்தியர்கள் நற்பணிமனறம் இந்த நிதியுதவியை வழங்கி போட்டிக்கு சென்று வெற்றி பெறவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.  அவர்களுக்கு என்றும் நான் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றேன் நன்றி கூறுகின்றேன். 

நான் போட்டிக்கு போவதற்கு பணத்தேவைக்காக கேட்டபோது எந்த உதவிகளையும் செய்யாது எனக்கு கடைசிவரை உதவுவதாக தெரிவித்து எதையும் செய்யாத அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இப்போது என்னைத் தேடி வருகின்றார்கள்.  இந்த உதவியை முதல் செய்திருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும் ஏனெனில் என்னைப் போல் ஏராளமானவர்கள் சாதிக்க ஆர்வமுள்ளவர்களாக உள்ளார்கள் அவர்களுக்கு நிதி ஒரு பிரச்சனையாக உள்ளது சமூகத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் நிறையவே உள்ளது அதை எல்லாம் தாண்டி நாங்கள் முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இவரை போன்று பலர் சாதிக்க முனைந்தாலும் அவர்களது குடும்பங்களின் வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது. சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும். (சு. பாஸ்கரன் )

  • 671