Feed Item
Added a news 

நாடாளாவிய ரீதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று (20) மற்றும் நாளைய தினம் (21) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் வவுனியா நகரசபையினரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாப்போம் நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்வோம் ‘ எனும் தொனிப்பொருளில் நகரசபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் பகுதியிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு முன்பாக இன்று (20.01.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தெய்வெந்திரம் ரதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களான வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் மற்றும் விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் , சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நகரசபை செயலாளர் இ.தயாபரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தினர்கள் டெங்கு பெருகும் இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றி டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர். அதனைத்தொடந்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பூந்தோட்டம் , பெரியார்குளம் , குடியிருப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் அமல்படுத்தப்பட்டது.

வீடுகளில் டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்படின் வீட்டின் உரிமையாளருக்கு முதலாவது எச்சரிக்கை வழங்குவதுடன் தேவையற்ற கழிவுகள் இருப்பின் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டது. மேலும் கிணறுகளில் மீன்கள் விடும் நடவடிக்கையும் இடம்பெற்றிருந்ததுடன் வீதியோரங்களில் காணப்படும் கழிவுகள் நகரசபை சுகாதார பணியாளர்களினால் அகற்றப்பட்டது.

  • 476