Feed Item
Added a news 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

நேற்று (26) முற்பகல் கூடிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார். வைத்தியசாலைகளுக்கு க்லினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சையகத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி ஒரு மாதம் கடந்த தொற்றா நோய்களுக்கு இலக்காகியுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம், புற்று நோயாளிகள், புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவோர், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோர், இரத்தமாற்று செய்யப்பட்ட நோயாளிகள், தொற்றா நோய் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அனைவருக்கும், விசேட வைத்திய பரிந்துரைக்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

உரிய சிகிச்சையகங்கள் (க்ளினிக்) அல்லது சனிக்கிழமை நாட்களிலும், இத்தரப்பினருக்கான மூன்றாவது தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்

  • 540