Feed Item
Added a news 

“நான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கினேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை மீற மாட்டேன். விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உடுபந்தாவ - புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி அவர்கள் நேற்று (23) முற்பகல் சென்றிருந்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் பயிர்ச்செய்கை நிலத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி, அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தினார். உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டார்.

உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்கள் தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டார்.

அதன் பின்னர், உடுபந்தாவ பிரதேச சபை வளாகத்தில் உள்ள கழிவு மீள்சுழற்சி மத்திய நிலத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

  • 628