Feed Item
Added article 

சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். இவர் நடிகர் எம்ஜிஆரின் தீவிர ரசிகை ஆவார்.

எம்.ஜி.ஆர். அவர்களின் மேடைப் பேச்சைக் கண்டு கை தட்டி ஆரவாரம் செய்த இவரை அழைத்த எம்.ஜி.ஆர். படிக்கும் வயதில் மேடைக்கு வரக்கூடாது நன்கு படித்த பின்னர் என்னை வந்து பார் என்று அறிவுரை கூறியுள்ளார்.

அவர் குடும்பத்திற்கு கல்வி செலவுக்காக பண உதவியும் செய்துள்ளார். அதன் மூலம் படித்த கோவை சரளா பத்தாவது முடித்த பின்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் 1979 ஆம் ஆண்டு கே.ஆர். விஜயா அவர்கள் நடிப்பில் வெளியான வெள்ளி ரதம் திரைப்படத்தில் நடித்தார்.

12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய இவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்து அவர்களது குடும்ப நண்பரான இயக்குனர் பாக்யராஜ் அவரின் இயக்கத்தில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடித்தார். 

வேறு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சின்ன வீடு திரைப்படத்தில் 18 வயதான கோவை சரளா அம்மா வேடத்தில் நடித்தார். பின்னர் கவுண்டமணி, செந்தில் இவர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். 

சதி லீலாவதி திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நடிப்பு மற்றும் நடனத்தில் திறமையான அவர் வில்லு திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

தனது சகோதரிகளுக்கும் சகோதரனுக்கும் திருமணம் செய்து வைத்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது உடன்பிறந்தவர்களின் குழந்தைகளை வளர்த்து வரும் இவர் திருமணத்தில் நாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

  • 503