Feed Item
Added a news 

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எனக்கு கடந்த 16ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 7வது கடிதம் அனுப்பப்பட்டு என்னை அழைத்தார்கள். அங்கு, எனக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் மௌனிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆகின்றது. 12 வருடமும் இத்த நாட்டிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்வதுபோலத்தான் தெரிகின்றது.மக்கள் பிரதிநிதிகளைப்பொறுத்தவரையில் தொடர்ந்து விசாரணைகளிற்கு அழைப்புவிடுக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயக நாட்டிலே அரசியல்கட்சியில் இருப்பவர்களை துன்பப்படுத்துவதும், துயரப்படுத்துவதும் மன வேதனையாக இருக்கின்றது.வடக்கு கிழக்கிலே கொரோனா என்ற கொடிய நோய் வந்து எத்தனையோ மக்கள் பசி பட்டினியில் வாழ்கின்றார்கள். அதற்கு அயல் நாடுகளில் உள்ள உறவுகள் உதவிகளை புரிந்தால் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என பதியப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினாலும், இராணுவத்தினாலும் விசாரணை நடத்தப்படுகின்றது.ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எம்மிடம் ஒரு லட்சம் ரூபா பணத்தை நிவாரணம் கொடுக்குமாறு வழங்கினால், நிவாரணம் கொடுத்த பின்னர் இராணுவ முகாமிலிருந்து வருகை தந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.இந்த ஜனநாயக நாட்டிலே ஜனநாயகமாக மக்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் இந்த நாட்டில் இடமில்லை. இவ்வாறு தமிழ் மக்களிற்கு இடமில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் தமிழர்களை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.மான்புமிகு ஸ்ராலினிற்கு நான் நன்றி கூறுகின்றேன். அகதிகளாக போன தமிழ் மக்களிற்கு சொந்த இடத்தை கொடுத்த வாழ்வதற்கான வழியை அமைத்து கொடுத்திருக்கின்றார். அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். அண்மையில் ஜேர்மனியிலிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் புலிச்சாயம் பூசப்பட்டு விசாரணை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்கள். காணாமல் போனவர்கள் இன்று வீதிகளிலே இருக்கின்றார்கள். அவர்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு போனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற போர்வையில்தான் வருகின்றார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி. இறந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்தலாம் என 7 வருடங்களிற்கு முன்னர் மங்கள சமரவீர ஐநாவிலே கூறியிருந்தார். இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.இலங்கை தீவிலே எந்த அரசாங்கம் மாறுகின்றதோ அந்த அரசாங்கத்திற்கு ஏற்ற வகையில் சட்டம் மாறுகின்றது. சட்டங்கள் மாறுபட மக்கள் பாதிக்கின்றார்கள். இந்த கொரோனா காலத்திலும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணை என்ற போர்வையிலே மக்கள் விசாரிக்கப்படுகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளை பயமுறுத்துகின்றார்கள்.இந்த நாட்டு ஜனாதிபதியிடம் கையெடுத்து நான் கேட்கின்றேன், நீங்கள் உலக நாடுகளிடம் போய் தமிழ் மக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும், இந்த நாட்டில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள். ஆனால் எமக்கு வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபா வந்தாலும் விசாரணை நடைபெறுகின்றது. இந்த விசாரணைகள் என்று இல்லாது போகின்றதோ அன்றுதான் தமிழரின் தீர்க்கதரிசனமான முடிவு வரும் என நான் பதிவிட விரும்புகின்றேன்.கடந்த 9ம் மாதம் 16ம் திகதி விசாரணைக்காக எனக்க அழைப்பு வந்தது. குறித்த விசாரணை கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத விசாரணைபிரிவில் 3 மணிநேரம் விசாரணை இடம்பெற்றது. குறித்த விசாரணையில் எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றது, அந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எனக்கும் உள்ள உறவுகள் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தொடர்பிலும் விசாரணை இடம்பெற்றது.சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளாது என்னிடம் விசாரிப்பதானது நியாயமற்றது என அவர்களிடம் கூறியிருந்தேன். மக்கள் பிரதிநிதிகள் அடங்கி போனால் பொதுவாக அரசியல் அடங்கி போகும் என்று நினைக்கின்றார்கள்.பொதுவாக குறித்த விசாரணையில் 14 கேள்விகள் கேட்கப்பட்டது. நிவாரணம் வழங்குவதற்கு எவ்வாறு பணம் வருகின்றது எனவும், வெளிநாடுகளில் உங்களிற்கு தொடர்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் அதிகமாக இன்று ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றார்கள். நாங்கள் பசி பட்டினியில் இருக்கும்பொழுது அவர்கள் அள்ளி கொடுக்கும் பணம்தான் இன்று வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் வாழக்கூடியதாக இருக்கின்றது.பொதுவாக சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கும் உதவிகளை புரிகின்றார்கள். யாழ் போதனா வைத்தியசாலை உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ உதவிகளெல்லாம் புரிகின்றார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

  • 561