Feed Item
Added a news 

கனடாவில் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமரானார். ஆனால், 2019 தேர்தலில் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா அரசு சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து முடிவெடுக்க வேண்டிய சூழலே நிலவிவந்தது.

 

கொரோனா தடுப்பு பணிகளால் மக்கள் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் நற்பெயரைக்கொண்டு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே, அதாவது 2023-ல் நடைபெற வேண்டிய தேர்தலை இந்த ஆண்டே நடத்த ஜஸ்டீன் ட்ரூடோ முடிவு செய்தார்.அதன்படி 338 இடங்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தது. வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜஸ்டீன் ட்ரூடோ தொடர்ந்து மூன்றாவது முறையாக கனடாவின் பிரதமராகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை லிபரல் கட்சி பெறவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 170 இடங்கள் தேவை என்கிற சூழலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த முறையும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஜஸ்டீன் ட்ரூடோ தள்ளப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரிகிறது.

 

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக கனடாவில் ஆட்சியை தீர்மானிக்கும் கிங்மேக்கராக ஜக்மீத் சிங் உருவாகியுள்ளார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சியை தீர்மானிக்கும் கிங்மேக்கராக ஜக்மீத் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜக்மீத் சிங் உள்பட இந்திய வம்சாவளியினர் 17 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

தேர்தல் வெற்றி குறித்து ஜஸ்டீன் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தை தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கொரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப்போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

  • 585