Feed Item
Added a news 

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது. இதில் மொத்த தண்ணீர் கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும். இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த நீச்சல் குளத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களுடன் பழைய பணிமனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவருவதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

தண்ணீருக்கடியில் 56 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப்படுத்தும் 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தண்ணீருக்கடியில் 100 பேர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளையும் நடத்த வசதி உள்ளது.

ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் எரிமலை பாறைகள் வழியாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது நாசாவின் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நீச்சல் குளத்தை கின்னஸ் நிறுவனம் உலகின் மிக ஆழமான நீச்சல் குளமாக  பதிவு செய்துள்ளது. இதனை கடந்த 7-ந் தேதி துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இன்று (புதன்கிழமை) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டணங்கள் குறித்தும் இணையதளத்தில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • 591