Feed Item
Added a news 

கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் அலையில் ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 1 லட்சத்தை எட்டியிராத நிலையில், இந்த இரண்டாவது அலை, கடந்த சில நாட்களாக தினந்தோறும் 2 லட்சத்துக்கு அதிகமானவர்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு 8.45 மணிக்கு டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய போரை நாடு மீண்டும் நடத்தி வருகிறது. சில வாரங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது 2-வது அலையானது, புயல்போல வந்து விட்டது. நீங்கள் அனைவரும் சந்தித்து வருகிற கஷ்டங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொற்று நோய்க்காலத்தில் சேவையாற்றி வருகிற டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் என அனைவரும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தங்களது உயிர்களைப் பணயம் வைத்து சேவையாற்றுவதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக வேகமாக மருந்துகளை தயாரித்து அளிக்கிற வலுவான மருந்து துறையை இந்தியா பெற்றுள்ளது.

அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஒழுங்குடன் பின்பற்ற வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடு அவசியம்.

வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பொது முடக்கத்துக்கு எதிராக நாம் காத்துக்கொள்ள வேண்டும். இதை மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கடுமையான போராட்டத்தை நடத்தி உள்ளது. இதற்கான பெருமை உங்களைத்தான் (பொதுமக்களை) சேரும்.

பொதுமக்களாகிய உங்களது பங்கேற்பு என்ற ஆயுதத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க முடியும். தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் கூறினார்.

  • 490