Feed Item
Added a news 

இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.யொருவர் பாராளுமன்றத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.


முஜிபுர் ரஹ்மான் எம்.பி, குறிப்பிடுகையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றத்துக்கு நேற்று (5) சமர்ப்பித்தேன்.


பாராளுமன்ற பிரதான செயலாளரினால் பாராளுமள்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜதந்திர கடவுசீட்டு விநியோகிக்குமாறு தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய பிரஜை என்பதால் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்று வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் என்றவகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா என கேட்கின்றேன் என்றார். இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி எம்.பி. குறிப்பிடுகையில்,

21 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இரட்டைக் குடியுரிமையை கொண்ட பெண் எம்.பியொருவர் சட்டத்திற்கு புறம்பான வகையில் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றார். இதன்படி இந்த விடயத்தில் சபாநாயகர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்றார்?

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.

  • 345