Feed Item
Added a news 

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை மற்றும் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் நேற்று (04-27-2022) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக முல்லைத்தீவிலிருந்து பயணிக்கின்ற அனைத்து அரச பேருந்துகளையும் மறித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல மணி நேரம் பேருந்துகளுக்காக காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு அதன் ஊடாக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் முல்லைத்தீவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் எரிபொருள் நிரப்புவதற்குரிய வசதிகள் இல்லாததன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடகவே இதுவரை காலமும் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய நிலைமையில் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எரிபொருள் வராத நிலையிலே தங்களுடைய போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக எரிபொருளை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளை பூர்த்தி செய்யுமாறும் அரச பேருந்து சாலையில் உடனடியாக எரிபொருளை நிரப்பக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி அதனூடாகவேணும் எரிபொருளை பெற்று தருமாறும் இல்லையெனில் தாங்கள் போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாது என்ற நிலையை வெளிப்படுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களுக்கான எரிபொருள் விநியோகம் வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பாக தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

இதனால் அங்கு சென்று பெற்றுக்கொண்டு தங்களுடைய நேரத்திற்கு அமைவாக போக்குவரத்து சேவைகளை செய்ய முடியாத உள்ளதாகவும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான எரிபொருளை உரிய வகையில் பெற்றுத்தந்து போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கு வழி செய்யுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இந்த பிரச்சினை இருப்பதன் விளைவாக இவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று போக்குவரத்து சேவைகளை நடத்தாமை காரணமாக அங்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வருகை தந்து நிலைமைகளை கட்டுப்படுத்த முற்பட்டபோதும் மாவட்ட அரசாங்க அதிபர் வருகை தந்து இதற்கான தீர்வுகளை பெற்று தர வேண்டுமென அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்)க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் ஆகியோர் வருகை தந்து சம்பவங்களை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் குறித்த பிரச்சினை தொடர்பில் தங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என கேட்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி குறித்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்த்தருவதாக அளித்த வாக்குறுதிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டு காலை முதல் தடைப்பட்டிருந்த பேருந்து சேவைகள் பதினொரு மணியளவில் வழமைக்கு திரும்பின.

  • 376