Feed Item
Added a post 
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திருவள்ளூரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இக்கோயிலின் மூலவரான லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டியும் அருள்பாலிக்கிறார். 
நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பாகும்.

இத்தல மூலவர் பரஸ்பர ஆலிங்கனம் அமைப்பில் உள்ளதால் இவருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு.

நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால், தீராத கடன், நோய் மற்றும் திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் கருடாழ்வார் 4 அடி உயரத்தில் கழுத்தில் 16 நாகங்களை அணிகலன்களாக அணிந்து அழகாக அருள்பாலிக்கிறார். ஆதலால் இக்கோயில் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

வேறென்ன சிறப்பு?

இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார் அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது.

பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி ஆகியோர் அழகாக காட்சி தருகின்றனர்.
பிரகாரத்தின் மேற்கு பக்கம் சென்றால் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆனி பிரமோற்சவம் 10 நாட்கள், நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்), ஸ்ரீஜெயந்தி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் மற்றும் நெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
  • 223