Feed Item
Added a post 

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் வசித்து வந்தவ புருஷோத்தம்- பத்மஜா தம்பதிக்கு அலேக்கியா, சாய் திவ்யா என்று இரு மகள்கள் உண்டு. வேதியியலில் பட்டம் பெற்ற புருஷோத்தம் அரசு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றினார். பத்மஜா கணித பேராசிரியர். இவர், பல்கலையில் படிக்கும் போது தங்கப்பதக்கம் பெற்றவர். ஐ.ஐ.டி கோச்சிங் சென்டரிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். மெத்த படித்திருந்தாலும் இந்த தம்பதிக்கு பூஜைகளில் அதீத நம்பிக்கை உண்டு.

பத்மஜாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வலிப்பு நோய் குணமாவதற்காக அவ்வப்போது வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் , இரு மகள்களையும் நரபலி கொடுத்தால், பத்மாஜாவின் வலிப்பு நோய் குணமாகும் என்று கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே , பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்ட தம்பதியர், தங்களுக்கு இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும், தங்கள் பூஜை காரணமாக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்றும் நம்பியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களின் இரு மகள்களையும் பூஜை நடத்தி தாய் பத்மஜா அடித்து கொன்றுள்ளார். அதற்கு புருஷோத்தம் உடைந்தையாக இருந்துள்ளார். மகள்களை கொன்ற பிறகு, தன் நண்பரான ராஜூ என்பவரை போனில் அழைத்த புருஷோத்தம், மகள்களை மனைவி பத்மஜா அடித்து கொன்று விட்டதாக தகவல் கூறியுள்ளார். ராஜூ பதறியபடி வீட்டுக்கு சென்ற போது, அவரை வீட்டுக்குள் விட தம்பதி மறுத்துள்ளனர். தொடர்ந்து, போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்களின் உடல்களை மீட்டனர்.

கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின் உடல் பூஜை அறையில் கிடந்தது. மற்றோரு பெண்ணின் உடல் இன்னோரு அறையில் கிடந்துள்ளது. இரு உடல்களையும் சிவப்பு வண்ண துணி கொண்டு போர்த்தி வைத்திருந்தனர். தற்போது, புருஷோத்தம் , பத்மஜா ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். வீட்டிலிருந்து ஏராளமான கடவுள் சிலைகள் கைப்பற்றப்பட்டன. பூஜை நடத்தும் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக, இந்த புது வீட்டில் தம்பதியினர் குடியேறியதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக போபாலில் உள்ள Indian Institute of Forest Management நிறுவனத்தில் பணியாற்றி வந்த அலெக்கியா சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும் வகையில் பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார். ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்த சாய் திவ்யாவுக்கு பெற்றோருடனே தங்கியிருந்துள்ளார். கொல்லப்பட்ட சாய் திவ்யா ஏற்கனவே ஒரு முறை வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

மேலும், சாய் திவ்யா கொல்லப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சந்தேகத்துக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடத்தில் நடந்த விசாரணையில் , இந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவில் உக்கிரமாகவே இருப்பார்கள். வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் என்கின்றனர். இரு இளம் பெண்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 962