Feed Item
Added a news 

மன்னார் சாவல்காட்டு கிராமத்துக்கும், பனங்கட்டி கொட்டு கிராமத்திற்குமான மோதல் உச்சமடைந்து, சாவல்காட்டு கிராம மக்கள் அடைக்கலம் தேடி, நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக ஓடிச்சென்றனர்.

நேற்று (24) இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

பனங்கட்டி கொட்டு கிராமத்திற்கும், சாவல்காட்டு கிராமத்திற்குமிடையில் அண்மையில் மோதல் இடம்பெற்று வருகிறது. பனங்கட்டி கொட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சாவல்காட்டு இளைஞர்கள் அண்மையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து இரண்டு பகுதி இளைஞர்களும் அடிக்கடி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பொலிசார் மோதலில் ஈடுபடுபவர்கள் பலரை கைது செய்த போதும், மோதல் நின்றபாடாக தெரியவில்லை.

இந்த நிலையில், நேற்று இரவு பனங்கட்டிக் கொட்டு இளைஞர்கள், சாவல்காட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள், சாவல்காட்டு பிரதேசத்திலுள்ள சில வீடுகளிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலினால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி ஓடிச்சென்று, மன்னார் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக ஒன்றுகூடினர்.

நடுவீதியில் மக்கள் அமர்ந்ததால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவர்களை அப்புறப்படுத்தி, பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

பின்னர் சாவல்காட்டு மக்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து தாக்குதல் குழுவை சேர்ந்த சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

  • 569