Feed Item
·
Added a post

“வெகு நாட்களாக அந்த பங்களா பூட்டப்பட்டு கிடந்தது. பங்களா நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. கடந்த இருபது வருடங்களாக எவரும் அந்த பங்களாவிற்கு குடிபோகவில்லை. காரணம் எவருக்கும் தெரியவில்லை.

தனஞ்செயன் அந்த பங்களாவை வாங்க முடிவு செய்தான். நகரில் விசாரித்த போது, ஒருவர் கூட நல்ல தகவல் தரவில்லை. பங்களா மிகவும் குறைந்த விலைக்கு கிடைத்தாலும் வாங்கவேண்டாம் என்றே அவனுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். அந்த அறிவுறுத்தல்கள் தான் அவனுக்கு அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியது. இரண்டு கோடி மதிப்புள்ள அந்த பங்களா வெறும் 20 லட்சத்திற்கு தருவதாக சொன்னார்கள். அதாவது பத்தில் ஒரு பங்கு மட்டுமே விலை.

அதை வாங்கி, செப்பனிட்டு, ஒரு வருடம் குடியிருந்து விட்டு மூன்று கோடிக்கு விற்று விடவேண்டும் என்று தீர்மானம் செய்தான் தனஞ்செயன்.

பங்களாவின் காவல்காரனிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறக்க ஆரம்பித்தான் தனஞ்செயன். பழங்காலத்து கதவு. மெதுவாக மெதுவாக நகர்ந்தது. கிரீச் கிரீச் என்று சத்தம் செய்தது. ஆயிரம் எலிகள் ஓன்று சேர்ந்து சப்தம் செய்தது போல இருந்தது.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே பார்த்தவனுக்கு, சிலந்தி வலைகளும், நூலாம்படைகளும், தூசிகளும் தான் தெரிந்தன. இருபது அடி தூரத்தில் இருந்த கதவு கூட கனவில் வரும் மெல்லிய தகடு போல தெரிந்தது.

நடந்தவன், இரண்டாம் கட்டின் கதவை திறந்து உள்ளே இரண்டு நிமிடங்கள் உற்று பார்த்து விட்டு இரண்டு அடி நடந்திருப்பான்.

அப்போது தான் அது நடந்தது.

"பொத்" என்று அவன் முன்பாக பொருள் வந்து விழுந்தது. கண்களை நன்றாக துடைத்துவிட்டு சிலந்தி வலைகளுக்கிடையில் அவன் பார்க்கவும் தான் தெரிந்தது -

"அது ஒரு வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கை என்று"

------

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த துப்பறியும் நிபுணர் ஜீவா கையில் ஒரு பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டிருந்தான். அவன் இந்த மாதிரி செய்கிறான் என்றால் தீவிர சிந்தனை அவன் மூளையை ஆக்கிரமித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடங்களுக்கு முன்பாக தனஞ்செயன் வந்து சொன்னது இன்னும் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. மனதில் அவன் வந்து போனது நிழலாடியது.

வியர்த்து விறு விறுத்து வந்து மேசையின் எதிர்புற நாற்காலியில் அமர்ந்த தனஞ்செயனை பார்த்ததுமே, தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஜீவா. லபக் லபக் என்று குடித்து முடித்த தனஞ்செயன் சொல்ல ஆரம்பித்தான்.

"சார், நான் நம்பவே இல்லைங்க. நான் பல வெளிநாடுகள் தைரியமாக சென்று விட்டு வந்தவன். எனக்கு அந்த நிமிடம் வரை தைரியம் இருந்தது. வெட்டப்பட்ட கை என் முன்னால் வந்து விழும் என்று நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது. ஒரு நிமிடம் ஆடி போயிட்டேன். அங்கிருந்து உயிரோடு திரும்பினால் போதும் என்று தீர்மானித்து கொண்டு, என்னுடைய காரை கூட எடுக்காமல், ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு நேராக இங்கு வருகிறேன். எப்படியாவது கண்டு பிடித்து சொல்லுங்கள்."

"நீங்கள் எதாவது அங்கு விட்டு விட்டு வந்தீர்களா?"

"இல்லேங்க; நான் அந்த வீட்டில் இருந்தது 3 நிமிடங்கள் மட்டும் தான்."

"வெட்டப்பட்ட கை - எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?"

"சரியாக நினைவு இல்லேங்க"

"நல்லா நினைவுபடுத்தி சொல்லுங்க"

“சார், ஒரே நிமிஷம்; நான் அதுவரைக்கும் தைரியமாக தான் இருந்தேன். கை என்பதை தெரிந்து கொண்டேன். வெட்டப்பட்ட இடத்தில இரத்தம் உறைந்து இருந்தது. இப்பொழுது வெட்டப்பட்ட கை மாதிரி இல்லை. ஏற்கனவே வெட்டப்பட்டு இருந்தது போல இருந்தது. மணிக்கட்டு அருகில் பச்சை குத்தியிருந்தது போல தோன்றியது."

"நீங்கள் உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் தேவைப்படும்போது தொடர்பு கொள்ளுகிறேன்"

ஜீவாவின் சிந்தனையில் எண்ணங்கள் வந்து போயின.

01. ஏற்கனவே இறந்து போனவர் ஒருவரின் பிணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கையாகத்தான் இருக்கவேண்டும். இரத்தம் உறைந்த நிலை என்று சொன்னால் அப்படியாக தான் இருக்கவேண்டும்.

02. தனஞ்செயனை பயமுறுத்தவேண்டும் என்பதாகத்தான் இருக்கவேண்டும்.

03. அதற்கான காரணம் என்னவாயிருக்கும்? வீட்டை வாங்கவிடக்கூடாது.

04. அப்படி நினைக்கக்கூடிய எதிரி யாராக இருக்க முடியும்?. இதுவரை தனஞ்செயன் சொன்ன விபரங்களில் இருந்து பார்க்கும்போது அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு சின்ன வதந்தி பெரிசாகி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்திருக்கிறது.

05. எவருக்கோ அந்த பங்களா தேவைப்படுகிறது? அப்படியானால் எதற்கு தேவைப்படும்?

06. எவரும் அந்த பங்களாவில் குடியிருக்கவில்லை. அப்படியானால் சமூக விரோத காரியங்களுக்கு வேண்டி பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

07. அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, இப்படி பயமுறுத்தல் வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஜீவாவை பொறுத்தவரையில் அனுமாஷ்யத்தில் நம்பிக்கை என்பது துளி கூட கிடையாது.

உதவியாளர் கதவை திறந்து கொண்டு வந்து ஒரு கோப்பையில் சூடான தேநீர் வைக்கவும், அதை எடுத்து மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

"அப்படி மனித உறுப்புகள் கிடைக்கவேண்டும் என்றால் இரண்டு இடங்கள் தான் உண்டு. உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக அங்குள்ள மனிதர்களை சரிக்கட்டி செய்யலாம். அடையாளம் தெரியாத பிணங்களை அடையாளம் தெரியும் வரை மாரசுவரியில் வைத்திருப்பது வழக்கம். அங்கிருக்கும் வேலையாட்களை சரிக்கட்டி எடுத்து வருவதற்கும் வாய்ப்பு உண்டு."

"இந்த வீட்டை எத்தனை நபர்கள் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள் என்று தெரியவேண்டும். அந்த தினங்களில் இது போன்று மனித உறுப்புகள் காணாமல் போனது பற்றிய செய்திகள் உண்டா என்பது தெரியவேண்டும்."

ஜீவாவிற்கு தேவையான தடயங்களை நெருங்கி விட்டது போல தோன்றியது. சட்டென்று, கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து விஸ்வநாதனிடம் விபரங்கள் சொன்னான்.

இரண்டு மணி நேரத்தில் அவனுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்தன.

"கடந்த பத்து வருடங்களில் ஐந்தே நபர்கள் தான் பங்களாவை வாங்குவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள். அவர்கள் முயற்சி செய்த தினங்களில் மார்சுவரியில் இருந்து உறுப்புகள் காணாமல் போயிருக்கின்றன. நாய் கடித்துக்கொண்டு சென்று இருக்கவேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி ரெகார்டை முடித்திருக்கிறார்கள்."

ஒரு நாள் கழிந்தது. அடுத்த நாள் விடிகாலை ஏழு மணி -

விருட்டெண்ட்று எழுந்த ஜீவா அன்றைய தினத்தின் தமிழ் பத்திரிகைகளை கொண்டு வரச்சொல்லி பத்தி பத்தியாக படிக்க ஆரம்பித்தான். எட்டாம் பத்தி மூலையில் இருந்த செய்தி அவனை உறுத்தியது

"தாம்பரம் பிணவறையில் இருந்த பிணத்தின் உறுப்பு ஒன்றை நாய் கடித்துச்சென்று விட்டதாக தகவல் கொடுத்த பிணவறை காப்பாளரை காவல் நிலைய ஆய்வாளர் உலுக்கி எடுத்ததை கண்டித்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்."

அடுத்த இரண்டு நிமிடங்களில், கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து, தனது சந்தேகத்தை ஜீவா சொல்லவும், இரண்டு மணி நேரத்தில் அந்த ஊழியரை இழுத்துக்கொண்டு காவல் நிலையம் வந்து அங்கு அமர்ந்திருந்த ஜீவாவின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டான்.

ஏற்கனவே நன்கு கவனிக்கப்பட்டிருந்த உதவியாளன் எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாது சொல்ல ஆரம்பித்தான்.

"முந்தாநாள் என்னிடம் வந்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு பிணத்தின் கையை எடுத்து சென்றார்கள். இது போல நான்கு முறை நடந்திருக்கிறது. அதே ஆள் தான் வருவான்., எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சென்று விடுவான். அவன் பெயர் ராமசாமி. மூன்றாம் நம்பர் வீடு, குறுக்கு தெரு, படப்பையில் இருக்கிறான்."

அடுத்த மூன்று மணி நேரத்தில் விறுவிறுப்பான காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. "வெட்டுப்பட்ட கை" வந்து விழுந்ததின் காரணம் தெரிந்து போனது.

பத்திரிகையாளர்கள் புடை சூழ, ஜீவா சொல்லிக்கொண்டு இருந்தான். "இது ஒரு சமூக விரோத கும்பல். அவர்கள் கொலை, கொள்ளை, திருடு, கஞ்சா கடத்தல் போன்ற காரியங்கள் செய்யும் ஒரு ஒட்டு மொத்த கூட்டம் தங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் அந்த பங்களா. இதுவரை அவர்கள் அங்கு தங்கியிருந்தது காவல் அலுவலகத்திற்கும் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். அங்கு தான் குடிப்பார்கள், கூத்தடிப்பார்கள். ஆனால் எவருக்கும் தெரியாமல் மறைமுகமாக தான் செய்வார்கள். மக்களும் பாழடைந்த பங்களா என்று நினைத்து கவலைப்படவில்லை. பங்களாவை பார்ப்பதற்கு எவராவது வரும்போது தான் இது போன்ற மனித உறுப்புகளை கொண்டு வந்து போட்டு அவர்களை பயமுறுத்தி அனுப்பிவிடுவார்கள். மொத்தத்தில் அவர்கள் பயன்படுத்திய ஒரே ஆயுதம் - பயம் - பேய் பற்றிய ஒரு பயம். பங்களாவில் தங்கியிருந்த முப்பது சமூக விரோதிகளை இப்போது தான் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செயற்திருத்திருக்கிறார்கள் காவல் நிலை அதிகாரிகள்."

வெட்டுப்பட்ட கை விபரங்களை புட்டு புட்டு வைப்பதற்கு தன்னால் இயன்ற பங்கை செலுத்தி விட்டது.

  • 110