Feed Item
·
Added a post

வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ”அன்னக்காவடி தர்மம் தாயே!” என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.

இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.

ஏனைய சித்தர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு கோரக்கருக்கு உண்டு. சித்தர்கள் ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, பொதுவாக எல்லா சித்தர்களின் பாடல்களுமே மேலோட்டமான ஒரு பொருளும், உள்ளார்ந்த – எளிதில் விளங்காத ஒரு மறைபொருளும் கொண்டவை. இவற்றை தவறென எதிர்த்துக் குரல் எழுப்பியவர் கோரக்கர். அவ்வாறு பொருள் விளங்காத பல சித்தர் நூல்களையும் பொருள் புரியுமாறு தெளிவுறுத்தியவர் கோரக்கர். இவ்வாறு அவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு.

இந்நூல்கள் வெளிஉலகுக்குப் போகுமானால் தமக்கும் தமது நூல்களுக்கும் பெருமை குறையுமென்று கருதிய இடைக்காடர், அகப்பை, நந்திதேவர், மச்சமுனி, சட்டை நாதர், பிரம்மமுனி, அழுகண்ணர் ஆகிய ஏழு சித்தர்களும் கோரக்கரிடம் வந்து, அவர் இயற்றிய பதினாறு நூல்களையும் தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு வற்புறுத்தினர். மறுக்காமல் சரி என வாக்குக் கொடுத்த கோரக்கர், தன் ஆசிரமத்தில் உணவு அருந்தி விட்டுப் போகுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். கோரக்கர் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்ததில் அகமகிழ்ந்து ஏழு சித்தர்களும் உணவு உண்ண மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.

கோரக்கர் கஞ்சா இலைகளை அரிசிப் பருப்புடன் கலந்து அரைத்து அடைசுட்டு சித்தர்களுக்கு அன்புடன் பரிமாறினார். கஞ்சா இலை அடையை உண்ட அவர்கள் உடனேயே மயங்கிச் சாய்ந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோரக்கர், தான் இயற்றிய 16 நூல்களையும் சுருக்கித் தொகுத்து, ‘சந்திரரேகை’ என்று ஒரு நூலை உருவாக்கினார்.

சித்தர்கள் உறங்கி எழுந்து கோரக்கரிடம் அந்த பதினாறு நூல்களையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர். அந்நூல்களை தீயிட்டு அழித்தனர்! இந்த சுவாரஸ்யமான செய்தி, சந்திரரேகை நூலில் இடம் பெற்றுள்ளது.

வடக்குபொய்கைநல்லூர்

வடக்குபொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியில் கிட்டத்திட்ட 5 கி.மீ தொலைவில் வடக்கு பொய்கைநல்லூர் அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து பயணிப்பவர்கள் நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பயணிக்கும் வழியில் உள்ள பறவை என்னும் ஊரில் இருந்து திட்டத்திட்ட 3 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஊரை அடையலாம். வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர்) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது

நந்திநாதேஸ்வரர் திருக்கோயிலும் அதற்கு அருகேயுள்ள கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடமும் தான். சித்தர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து முக்தி பெற்றதால் இத்தலம் "சித்தாச்சிரம்" எனவும் போற்றப்படுகிறது.

  • 190