டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய பின் வங்கங் கடல் பகுதியில் கடந்த 29-ம் தேதி நுழைந்தது. இந்த புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாதிக்கப்பட்ட 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஜம்போ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. நெருக்கடி நிலையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் உதவியை இலங்கை நாடியது.
இதையடுத்து மேலும் 10 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையில் மழை பாதிப்பு குறைந்தாலும், தாழ்வான பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 400 பேரை புயலுக்குப்பின் காணவில்லை. இவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
வெள்ள பாதிப்பு காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 1,500 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதனால் மக்கள் அதிகளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.