ஒரு நாள் ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி வந்தார்.அவர் வழக்கத்திற்கு மாறாக தோளில் ஒரு பை வைத்திருந்தார். அந்தப் பையில் சில உணவுப் பொருட்கள், மலர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் இருந்தன.அவரைக் கண்ட அந்த ஊரில் இருந்த மற்றொரு ஜென் குருவின் சீடர்கள் ஆச்சரியப்பட்டனர்.
பொதுவாக ஜென் துறவிகள் எதையும் சுமக்க மாட்டார்கள்.
ஆனால் இவன் தோளில் ஒரு பை ஏந்தி நடக்கிறான். ஏன் இப்படி?” என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.
அவர்கள் அதைத் தங்கள் குருவிடம் கூறினர்.
குரு சிரித்தார்.
“சரி, நான் அவரிடம் சென்று பேசுகிறேன்,” என்றார்.
அவர் அந்த அந்நிய துறவியிடம் சென்று கேட்டார்:
“ஜென் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா?” என்றார்.
அந்தத் துறவி உடனே தோளிலிருந்த பையை கீழே வைத்தார்.
குரு தலையசைத்தார்.
“சரி,” என்றார்.
பிறகு அவர் மீண்டும் கேட்டார்:
“ஜெனைப் புரிந்த பிறகு, அதை எப்படி வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?” என்றார்.
அந்தத் துறவி உடனே அந்தப் பையை மீண்டும் தோளில் சுமந்தார்.
இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறி பிரிந்தனர்.
சீடர்கள் குழப்பமடைந்தனர்.
“குருவே, இதிலென்ன அர்த்தம்?” என்று கேட்டனர்.
குரு அமைதியாகச் சொன்னார்:
“ஜென் என்பது எல்லாவற்றையும் துறப்பது மட்டும் அல்ல.அதை நம்முள் உணர்ந்த பிறகு, உலகை மீண்டும் ஒரு புதிய பார்வையுடன் அனுபவிப்பது.
அந்தத் துறவி பையை சுமந்தது அவருக்காக அல்ல.அவரின் பையில் இருந்தது பிறருக்காக.
அதனால் அவர் தான் உண்மையான துறவி என்றார்.