Feed Item
·
Added a post

மங்கலான வெளிச்சத்தில் ஏசியின் குளிரை தாங்கிக் கொண்டிருந்த பாரில் அமர்ந்து மதுவை தொடர்ந்து குடித்து கொண்டிருந்த அந்த இளைஞன் பார்ப்பதற்கு சோகமாய் காணப்பட்டான்.

முகத்தில் மூன்று நாட்களே ஆன தாடி முளைத்திருந்தது. தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

பக்கத்து டேபிளில் அமர்ந்து நீண்ட நேரமாக அவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் அவனிடம் சென்று பேசினாள்,

'என்ன மிஸ்டர்..! எதையோ தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கிறது மாதிரி தெரியுது. உங்களுக்கு நீங்களே பேசிக்கிறீங்க. இவ்வளவு கவலைப்படற அளவுக்கு என்ன நடந்தது'

தலைநிமிர்ந்து அவளை பார்த்த இளைஞன் கண்களில் கண்ணீரோடு சொன்னான்,

'என் காதலி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். என் உலகமே அவள் தான் என எண்ணியிருந்தேன். அவளுக்காக எவ்வளவு செலவு செய்திருப்பேன் தெரியுமா?

அவள் இல்லாத உலகை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவளை மறக்க முடியாததால் தான் நான் குடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சோகம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது'

அதைக் கேட்டதும் என்னவோ போல் இருந்தது அந்த இளம் பெண்ணுக்கு.

எப்படியாவது அவன் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என முடிவு எடுத்து அவனிடம் கேட்டாள்,

'பிரிஞ்சி போற அளவுக்கு உங்க காதலி உங்ககிட்ட என்ன குறை கண்டாளாம்?'

அந்த இளைஞன் அழுது கொண்டே சொன்னான்,

'அவளை தயவு செய்து குறை சொல்லாதீங்க. அவள் மாதிரி ஒரு பெண் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. என்கிட்ட அவளும் அவள் கிட்ட நானும் ஒரு குறையும் கண்டதில்லை. அவள் பிரிந்து செல்லவில்லை. பிரிந்து செல்ல வைக்கப்பட்டாள்'

இதற்கு மேல் அவளைப் பற்றி கேட்டால் அவன் கதறி விடுவான் போலிருந்தது.

ஒரு பெண் இல்லாமல் ஒரு ஆண் வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டமானது என்பது அந்த காதலியை பிரித்த நபருக்கு தெரிய வேண்டாமா?

அந்த இளைஞனிடமிருந்து காதலியை பிரித்து நபர் மீது கோபம் எரிமலையாக வந்தாலும் அடக்கி கொண்டாள். நாமும் கோபப்பட்டால் பதிலுக்கு அவனும் பிரித்த அந்த நபர் மீது கோபப்படுவான் அல்லது சோகப்படுவான்.

அதனால் பேச்சை மாற்ற முடிவு செய்து அந்த இளம் பெண் பேசினாள்,

''உங்க காதலியை மறக்க குடிக்கிறதை தவிர உங்களுக்கு வேற ஏதாவது யோசனை இருக்கா?'

'இருக்கு' என்பதைப்போல் தலையை ஆட்டிக் கொண்டே பதில் சொன்னான்.

'அடிக்கடி அவளோடு டேட்டிங் போவேன். அதே மாதிரி நான் யாரோடாவது டேட்டிங் போனால் என் மனசு மாறலாம்'

அந்த இளம் பெண் அவனோடு டேட்டிங் செல்ல முடிவெடுத்தாள். அவளின் திட்டத்தை அவனிடம் கூறினாள். முதலில் தயங்குவது போல் இருந்தாலும் பிறகு சம்மதித்தான்.

இருவரும் டேட்டிங் போனார்கள். அவளுடைய பணத்தை தண்ணியாக செலவழித்து அவனுடன் பல ஊர்களுக்கு சென்று சுற்றினாள். குடிப்பதை அடியோடு விட்டிருந்தான்.

டேட்டிங் முடிந்ததும் அவனிடம் கேட்டாள்,

'இனிமேல் குடிப்பீங்களா..?'

'இதே மாதிரி அடிக்கடி நீங்க டேட்டிங் வந்தால் சத்தியமா குடிக்க மாட்டேன்' சந்தோஷமாக பதில் சொன்னான்.

பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அவனை அழைத்துச் சென்று சூடத்தை அணைத்து 'அடிக்கடி டேட்டிங் உன்னோடு வருவேன்' என சத்தியம் செய்தாள். இருவரும் தழுவிக் கொண்டார்கள்.

ஒரு குடிகாரனை திருத்திய சந்தோஷத்தோடு அவன் காதுகளில் கிசுகிசுப்பை கேட்டாள்,

'உங்க காதலி உங்களை விட்டு பிரிஞ்சு போகலை. பிரிஞ்சு போக வைக்கப்பட்டான்னு சொன்னீங்களே..! இதயமே இல்லாம உங்க காதலியை உங்ககிட்ட இருந்து பிரிச்சது யாரு..?'

அவனும் அவளின் காதுகளுக்குள் கிசுகிசுப்பாய் பதில் சொன்னான்,

'என் பொண்டாட்டி தான்'

  • 125