Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

போரின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன. அவற்றில் பல நடைபெற்று வருகின்றன. போரினால் சின்னாபின்னமான வன்னிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளில் பளிச்சென்று தெரிவது கட்டடங்களும் மின்சார வெளிச்சமும் செப்பனிடப்பட்ட வீதிகளுமே ஆகும். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வடக்கிற்கு வருபவர்கள், வவுனியாவிற்கு அடுத்ததாக ஏ-9 வீதியால் கிளிநொச்சியைக் கடக்கும் போது, இதனை ஒரு பெரிய மாற்றமாக காண்கின்றனர். நீண்ட வருடங்களாக இருளில் முழ்கியிருந்த வீதிகளிலும், வீடுகளிலும் இப்போது மின்சார வெளிச்சம் தெரிகிறது. இவை வன்னியின் அனைத்து பகுதிகளிலும் இன்னமும் முழுமையடையாவிடினும், சிறிது சிறிதாகவேனும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், வாழ்வாதாரம், தொழில்வாய்ப்பு போன்றவற்றை கட்டியெழுப்ப வேண்டிய பணிகள் உள்ளன. நாளடைவில் அவையும் ஒரு சீரான நிலைக்கு வரலாம். ஆனால், வெளிப்படையாக கண்ணுக்கு புலப்படாத வீழ்ச்சியை நோக்கி வட மாகாணத்தின் கல்வி நிலை சென்று கொண்டிருக்கின்றது என்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய ஆபத்தான நிலைமையாகும். இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தை விடவும் தமிழ் சமூகத்திற்கே அதிகம் உள்ளது. போர்க் காலத்திலிருந்ததை விடவும் இப்போது கல்வி நிலை வீழ்ச்சியடைந்துள்ளமையே இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். எறிகணைகளுக்கும், விமானக் குண்டுவீச்சுகளுக்கும் மத்தியில் மாணவர்கள் கல்வி கற்றார்கள். குப்பி விளக்குகளில் இரவிரவாக படித்து பரீட்சை எழுதினார்கள். அக்காலங்களில் பல பரீட்சைகளில் அதிக புள்ளிகளை இவ்வாறு கற்ற மாணவர்கள் பெற்ற நிலையும் இருந்தது. ஆசிரியர்களும் தங்களை அரப்பணித்து மாணவர்களுக்கு கற்பித்தார்கள். இன்று அவ்வாறு இல்லை. உண்மையில் போரின் பின்னான தற்போதைய காலத்திலேயே வட பகுதி மாணவர்களின் கல்வி நிலை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் வீழச்சியை நோக்கியே கல்வி சென்று கொண்டிருக்கின்றது. 2014ம் ஆண்டின் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் வட மாகாணம் ஒன்பதாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளமை- அதாவது, மாகாண அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ளது என்பது கவலைக்கிடமானது. கிளிநொச்சி மாவட்டம், மாவட்ட அடிப்படையில் 25வது இடத்திலுள்ளது. அதாவது மாவட்ட அடிப்படையில் கடைசி இடத்தில். வடமாகாண உயர்தரப் பாடசாலைகளில் விஞ்ஞான, கணித, வர்த்தக பாடங்களைக் கற்பிப்பதற்கு 2075 ஆசிரியர்கள் தேவையாக இருந்த போதிலும், 1841 ஆசிரியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர். இதனால் 224 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளது. சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆரிய வளங்கள் சரியான முறையில் பகிரப்பட வேண்டும். இதனை வட மாகாண கல்வி அமைச்சு சரிவர செய்ததாகத தெரியவில்லை. அந்தந்த கல்வி வலயங்களை வசிப்பிடமாகக் கொண்ட ஆரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள், பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளில் குறைந்தது 5 வருடங்களாவது கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 25 வீதமான மாணவர்கள் தாய்மொழியான தமிழில் சித்தியடைவதில்லை என்ற புள்ளிவிபரமும் உள்ளது. இது மிகவும் அதிர்ச்சி தரும் ஒன்றாகும். இந்த கல்வி வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்த அறிக்கை ஒன்று வட மாகாண முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிப்பட்ட சில விடயங்கள் வருமாறு- 1. விஞ்ஞானம் மற்றும், கணித பாடங்கள் பெரும்பாலும் கரும்பலகைக் கற்பித்தலாகவே காணப்படுவதால், செய்முறை ரீதியாகக் கற்பிக்கப்படுவது குறைவாக உள்ளது. 2. ஆசிரியர்களால் விஞ்ஞான செய்முறைகளைத் திட்டமிட்டு செயற்படுத்த முடியாது இருப்பதுடன், குறித்த பாடங்களைக் கற்பிப்பதற்கான மேலதிக அறிவும், ஆற்றலும், வினைத்திறனும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் குறைவாகவே காணப்படுவதுடன், ஆய்வுகூடங்களைப் பயன்படுத்துவதும் அரிதாகவே காணப்படுகின்றது. 3. பெரும்பாலான ஆசிரியர்களிடையேயும், வாசிப்புப் பழக்கம் குறைவாக இருப்பதனால், புதிய விடயங்களைச் சேகரித்து, கற்பித்தல் செயற்பாட்டில் பயன்படுத்தும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. 4. வலய, மாகாண கல்வி அலுவலகங்கள் மற்றும் மாகாண மத்திய அமைச்சுக்களின் மேற்பார்வையும், வழிகாட்டலும் குறைவாகவே உள்ளதுடன், வகைகூறலும், பொறுப்பேற்கும தன்மையும் ஆசிரியர்களிடமும், அதிபர்களிடமும், கல்வி அலுவலர்களிடமும் குறைவாகவே உள்ளன. 5. பெரும்பாலான ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வதில்லை. இது தொடர்பாக மேற்கொண்ட ஒரு ஆய்வில் 28 வீதமான ஆசிரியர்களே முன்னாயத்தங்களை மேற்கொள்வதாகவும், 14 வீதமானவர்களே கற்றல் கட்புல சாதனங்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 6. பாடசாலைக்குப் புறம்பான செயற்பாடுகள் குறைவாக இருத்தல். உதாரணமாக வெளிக்களப் பயிற்சி, தேவைக்கேற்ப மேலதிக வகுப்புகள் என்பவை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. 7. பாடசாலை மேற்பார்வைக் குழுவின் செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடைபெறுவதால், ஆசிரியர்களுக்கான பின்னூட்டல் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடசாலை உள்ளக மேற்பார்வைகள் கல்வித் திணைக்களத்தைத் திருப்திப்படுத்துவதற்காக அறிக்கைகளை எழுதி அனுப்புவதுடன் மட்டுமே உள்ளது. 8. பாடசாலை ஆசிரியர்களில் பலர் பகல் வேளைகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கச் செல்வதைக் காணமுடிகின்றது. சில பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தருமாறு மாணவர்களை ஊக்குவிப்பதால், இன்று பாடசாலைகளை விட, மாணவர்களின் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. 9. பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புக்களில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை எட்டு மாதங்களுக்கு முன்பாகவே- ஜனவரியில் இருந்தே படிப்பு விடுமுறை என்ற பெயரில் வெளியே விட்டுவிடுகின்றார்கள். இதனால், அந்த மாணவர்களின் கல்விக்கான பொறுப்பை பாடசாலைகள் கைகழுவி விடுகின்றன. இதன் மூலம் அந்த மாணவர்களின் பாடசாலைக் கல்வியின் பெரும்பகுதி வீணாக்கப்படுவதுடன் பாடசாலைகளின் முக்கியத்துவமும் உணரப்படாமலேயே போய் விடுகின்றன. இவ்வாறான குறைபாடுகள், குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அதற்கான தீர்வுகளும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை வட மாகாண சபையும், அதன் கல்வி அமைச்சும் காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும். கல்வி தொடர்பிலான சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களின் குழுவொன்று நிமிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளை வட மாகாணசபை பெற்று, முழுக் கவனத்தையும் இவ்விடயத்தில் செலுத்த வேண்டும். இவற்றை செய்யாது விட்டால் தமிழரின் பெரும் சொத்தான கல்விக்கு இழைக்கும் துரோகமாகவே அது அமையும். இரவியின் கட்டுரையிலிருந்து

Location
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend