HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

 

‘மனதுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி’ எனக் கோவிலுக்குச் சென்று, பூஜை வழிபாடுகளுடன், அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்றனர்.  தமிழ் மக்கள். எனினம்  தமத கலாசார விழுமியங்களுடன் புதுவருடக் கொண்டாட்டங்களில்  பெரும்பான்மையின மக்கள் ஈடுபட்டு நன்றாக வே கொண்டாடினர். ஆக நாட்டில் கொண்டாடப்படும் ஒரே விழா எனினும் தமிழ் மக்கள் வாழ்க்கையில் அது சோபிக்கவில்லை. இவ்வாறாகவே, நம் நாட்டின் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் பயணிக்கின்றது.   வடக்கு மாகாண ஆளுநர், யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடித்து வெளியேறும் தமிழர்களது குருதியில், சிங்கள இரத்தம் ஓடுகின்றது என பெருமிதம் கொள்கின்றார். சிங்களப் படையினர் வழங்கிய இரத்த தானத்தையே இவர் இவ்வாறாகக் கூறி, நல்லிணக்கம் வளர்க்கின்றார்.   

ஒரு தடவை கூறினால், தமிழ் மக்கள் மறந்து விடுவார்கள் என, இரண்டு தடவைகள் கூறியுள்ளார். ஆனால், இந்த கூற்றால், தமிழ் மக்கள் மனதளவில் கவலையடைகின்றனர்.    தமிழ் மக்களுக்குப் படையினர் இப்போது குருதி வழங்கியிருக்கலாம். ஆனால், முள்ளிவாய்க்காலில் ஓடிய இரத்த ஆற்றையும் இரத்த வாடையையும் ஒவ்வொரு தமிழ் மகன(ள)து உடலில் உயிர் உள்ள வரை மறக்க முடியுமா?  

குருதிக்கொடை என்பது, ஓர் உயர்ந்த  விடயம்; உயிர்க்கொடை. அதில் சிங்கள இரத்தம், தமிழ் இரத்தம் என வேறுபாடு கிடையாது. ஆனால், குருதிக்குள்ளும் குதித்து, குந்தியிருந்து அரசியல் நடாத்துவது, துயரத்திலும் துயரம்.  மக்களுக்கு அரச சேவையாற்ற, வவுனியா வந்த மாவட்ட செயலாளர், அரச செயலக வளாகத்தில், படையினரின் உதவியுடன் விகாரை கட்ட முற்படுகின்றார். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உயர் கல்வி கற்க, வவுனியா வந்த சிங்கள மாணவர்கள், வளாகத்தில் விகாரை கட்ட முற்படுகின்றனர். ஒட்டுசுட்டானில் கோவிலை இடித்து விகாரை கட்டப்பட்டுள்ளது.   

யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிள்ளையார் கோவில் வளவில் விகாரை கட்டி, கோவில் மடப்பள்ளியை பிக்குவின் வீடாக்கி, ‘கமுனு விகாரை’ எனப் பெயர் சூட்டி, நிறைவில் ஆதனமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைப் பொலிஸார் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றனர்.   

அந்நியரான ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்தில் கூட, உன்னத தியாகங்களின் மத்தியில், தமிழ் மக்கள் பாதுகாத்த கோவில்கள், சகோதர இனத்தின் ஆட்சியில் அழிக்கப்படுவதை, யார் தடுப்பார்?   
 ஆகவே இதைத் தமிழ் மக்கள், அந்நியர் ஆட்சிக்காலம் என அழைப்பதா அல்லது நல்லாட்சி என அழைப்பதா?    

ஆயிரம் நூலகங்கள் அமைத்து கல்வி வளர்க்கலாம்; ஆயிரம் விளையாட்டுக் கழகங்கள் அமைத்து விளையாட்டை ஊக்குவிக்கலாம். யுத்தத்தால் இல்லத்தை இழந்து, அல்லல்படும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்னமும் பரிதவிக்கின்றன. ஆனால், ஏதோ வடக்கு, கிழக்கில் ஒரு விகாரையும் இல்லாதது போல, ஆயிரம் விகாரைகளை அமைத்து, அதன் ஊடாக, எந்த விதமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என, ஆட்சியாளர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை.   

“இலங்கையில் வாழும் சிங்களவர்கள் நல்லவர்கள். அவர்கள் இன, மத வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. ஒரு சில குழப்பவாதிகள், சிறிய பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்” எனக் கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாழ். வந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்திருந்தார்.   

 

முல்லைத்தீவு, நாயாறில் சட்டவிரோதமாக நாற்பது படகுகளை வைத்து, கடற்றொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை, நாற்பது மாதங்களாக, ஆட்சி செய்வோரால் அசைக்க முடியாமல் உள்ளது.   விதையை விதைத்தவன் நித்திரையானாலும் இடப்பட்ட விதை விழித்திருக்கும்; அது ஒருபோதும் உறங்காது. அதேபோலவே, அன்று விதைக்கப்பட்ட இனவாத, மதவாத விதைகள், துளிர்கள் விட்டபடியே, அசுர வேகத்தில் பலமடைந்து வருகின்றன.   அது, ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட, மிகவும் வலுவான நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து, பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இந்த நாட்டின் அரச தலைவராக மஹிந்த வந்தாலென்ன, மைத்திரி வந்தாலென்ன, ஆக்கிரமிப்புகளும் தமிழர் விரோதப் போக்குகளும் நடந்தே தீரும் என்பது மட்டும் திண்ணம்.   

முதலாவது நபர், தமிழர் விரோத நடவடிக்கைளை அதிரடியாகவும் அடாவடியாகவும் நடாத்துவார்; நடத்தியவர். ஆனால், இரண்டாவது நபர், நாட்டில் நடக்கும் தமிழர் விரோத நடவடிக்கைகள் குறித்து, எள்ளளவும் தெரியாதது போல, அமைதியாக இருப்பார்.   

ஒட்டுமொத்தத்தில் எந்தச் சிங்களத் தலைமை ஆட்சியில் வீற்றிருந்தாலும், தமிழ் மக்களது எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளி, அந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட, இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதே, அவர்களது கடமைப் பட்டியலில் முக்கியமானது. ஆனால் அதை நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் கூறி நாசுக்காக முத்திரை குத்தி நடாத்துவதையிட்டு தமிழர்கள் கவலை கொள்கின்றனர்.  

Photos
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend