Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.

இப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி கடந்த காலங்களையும் விட இம்முறை அதிகளவிலான மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

என்றாலும் மூன்று மொழி மூலங்களிலும் இப்பொதுப் பரீட்சையை நடாத்தி பெறுபேறுகளை வெளியிட்டுள்ள பரீட்சைத் திணைக்களம் ,சிங்கள மொழி மூலத்தில் தோற்றிய மாணவர்கள் மத்தியில் மாத்திரம் தரப்படுத்தலை மேற்கொண்டு முதல் பத்து இடங்களை வெளியிட்டிருப்பதற்கு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கமும், கல்வி நிர்வாக சேவையின் கிழக்கு மாகாண சங்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இது நியாயமான ஆட்சேபனை. அது தான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இந்நாட்டில் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் 14 வயது வரையும் கட்டாயம் கல்வி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு கல்வி வழங்கத் தவறுகின்ற பெற்றோருக்கும் பாதுகாவலருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அப்பிள்ளைகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கவும் சட்ட ஏற்பாடு உள்ளது.

இவ்வாறு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் இந்நாட்டில், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என முக்கிய மூன்று பொதுப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.

இவற்றில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் ஏனைய இரு பரீட்சைகளும் மூன்று மொழிகளிலும் நடாத்தப்படுகின்றன.

அந்த வகையில் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மூன்று மொழிகளிலும் நடத்தப்படுகின்ற இப்பரீட்சையில் இம்முறை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். இப்பரீட்சையின் பெறுபேறே இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பொதுப் பரீட்சையை மூன்று மொழி மூலங்களிலும் நடத்தி விட்டு சிங்கள மொழி மூல மாணவர்கள் மத்தியில் மாத்திரம் முதல் பத்து இடங்களையும் தெரிவு செய்து அறிவித்திருப்பது பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஒப்பான செயல் என்றும் 'இது தமிழ் மொழி மூல மாணவர்களைப் பாதிக்கக் கூடியது' என்றும் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

அத்தோடு கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரபட்ச செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றதா? என்றும் அச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

உண்மையில் கடந்த ஆட்சிக் காலத்தில் வருடா வருடம் இப்பொதுப் பரீட்சைகள் மூன்று மொழிகளிலும் நடாத்தப்பட்ட போதிலும் சிங்கள மொழி மூல மாணவர்கள் மத்தியில் மாத்திரம் முதல் பத்து இடங்களும் தெரிவு செய்யப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதோடு, அம்மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு வெளிநாடுகளுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்செயற்பாடு காரணமாக தமிழ் பேசும் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். 'தாம் எவ்வளவு தான் முயற்சி செய்த போதிலும் எம் முயற்சியின் பெறுபேறுகளும் திறன்களும் கருத்தில் கொள்ளப்படுவதாக இல்லையே' என ஆதங்கப்படக் கூடியவர்களாகவும் மாணவர்கள் இருந்தனர்.

இந்த நிலைமையையிட்டு தமிழ் பேசும் பெற்றோர் பெரும் கவலைக்கு உள்ளாகினர். இருந்தும் கடந்த ஆட்சிக் காலத்தில் இவை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

அவ்வாட்சிக் காலத்தில் பராபட்சங்கள் வெளிப்படையாகவே இடம்பெற்றன. இதனை எவருமே மறுக்க மாட்டார்கள். அதன் காரணத்தினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்'தலிலும், பொதுத் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் வாக்குகளையும் இழந்ததோடு தோல்வியும் அடைந்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போன்ற பாரபட்சங்கள் நல்லாட்சியிலும் இடம்பெற இடளிக்கலாகாது என்பதே மக்களின் நிலைப்பாடு. நாட்டில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும், சிங்கள மொழிப் பாடசாலைகளும் தனித்தனிப் பாடசாலைகளாக இயங்குகின்றன.

அத்தோடு பரீட்சைகளும் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களில் வேறு வேறாகவே நடாத்தப்படுகின்றன. அப்படியிருக்கையில் ஒரு மொழி மூலத்திற்கு மாத்திரம் தரப்படுத்தலை வெளியிடுவது எவ்வாறு நியாயமாகும்.

இது பாரபட்சமான செயலாகவே அமையும். அத்தோடு இத்தரப்படுத்தலைப் பொதுத் தரப்படுத்தலாக நோக்கவும் முடியாது என்பது தான் ஆசிரிய சங்கங்களின் ஆட்சேபனைக்கு அடித்தளமாக உள்ளது.

ஆகவே இவ்விடயத்தில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரபட்சங்களும் ஒதுக்கல்களும் இவ்வாட்சியலும் தொடரலாகாது. அதுவே நாட்டு மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

அதனால் இச்செயற்பாட்டின் மூலத்தைச் சரியாக இனங்கண்டு அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அதுவே நாட்டுக்கு சுபிட்சத்தையும் வளத்தையும் தேடிக் கொடுக்கும்.

Location
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend