Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின.   ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர்.  

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.   மைத்திரியின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, சிறுபான்மை அரசாங்கமொன்றை அமைக்க, அமைச்சுப் பொறுப்பு எதையும் ஏற்காது, மஹிந்த அணி உதவி செய்வதாக உடன்பாடு காணப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி கூறியது. அந்த அரசாங்கத்தின் பிரதமராகப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படப் போகிறார் எனவும் கூறப்பட்டது.   

அதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி, ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுக் கொண்டதாகச் சிலர் கூறுகின்றனர். பிரதமர் ரணிலைப் பதவி நீக்கம் செய்வதற்காகச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என ஜனாதிபதி சட்டமா அதிபரின் கருத்தைக் கேட்டதாகவும் செய்திகள் அடிபட்டன.   

அத்தோடு, ஜனாதிபதி, பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியுமா, முடியாதா என்று பலர் அவரவரது அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அரசியல் விமர்சனங்களை வெளியிட்டார்கள்.   சில ஊடக நிறுவனங்கள் உட்பட, ரணில் விரோதிகளின் சட்ட விளக்கங்களின் படி, ஜனாதிபதி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், ரணில் ஆதரவாளர்கள், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் சுட்டிக் காட்டி, பிரதமரை எவ்வகையிலும் பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினர்.   தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என மஹிந்த ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். 2015 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை, அரசாங்கம் இந்தத் தேர்தல் முடிவுகளோடு இழந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டனர்.   

ஐ.தே.க இந்தத் தேர்தலில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை உண்மை தான். ஆனால், அரசாங்கம் என்பது ஐ.தே.க அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ஐ.தே.க மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகிய இரண்டுமே இன்னமும் அரசாங்கமாகக் கருதப்படுகின்றன.   முதலாவதாக கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் சபைகளுக்கும் இடையே விகிதாசார ரீதியில் காணப்படும் வேறுபாடு, தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறது. 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன, 239 சபைகளின் கட்டுப்பாட்டை பெறும்போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க வெறும் 41 சபைகளையே பெற்றுள்ளது.   விகிதாசாரப்படி, ஐ.தே.க சுமார் 175 சபைகளை பெற்றிருக்க வேண்டும். 15 இலட்சம் வாக்குகளைப் பெற்ற, ஸ்ரீ ல.சு.க மற்றும் ஐ.ம.சு.மு 70 சபைகளைப் பெற வேண்டும். ஆனால், 10 சபைகளையே அவ்விரண்டு கட்சிகளும் பெற்றுள்ளன.  இவ்வளவு சபைகள், நாட்டில் இல்லையே எனச் சிலர் கேட்கலாம். உண்மைதான். ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையென்றால், அவ்வாறு விகிதாசாரப்படி சபைகள் பிரிந்து செல்ல வேண்டும் என ஒருவர் எதிர்ப்பார்ப்பது நியாயமே.  தேர்தலில், தோல்வியடைந்த ஒரு கட்சிக்கு, இரண்டாவது பட்டியல் மூலமாக, ஏழு ஆசனங்கள் கிடைத்த போதிலும், அந்த அத்தனை ஆசனங்களுக்கும் பெண்களையே நியமிக்க வேண்டியுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். இது நியாயம் இல்லை என்றும், எனவே தேர்தல் முறை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.  

இதேவேளை, அவ்வாறு இரண்டாவது பட்டியல் மூலம் நியமிக்கப்படும் பெண்கள் யார் என்பதைக் கட்சித் தலைவர்களும் அந்தந்தச் சபைகளுக்குக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட குழுக்களின் தலைவர்களுமே முடிவு செய்வர்.   இது பல ஊழல்களுக்கு மட்டுமல்லாது பல கலாசார சீர்கேடுகளுக்கும் காரணமாகலாம். எனவே, தேசப்பிரிய கூறுவதைப் போல், சட்டம் திருத்தப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு சட்டம் திருத்தப்பட்டாலும் அது எதிர்காலத் தேர்தலுக்குத்தான் பொருந்தும். ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலுக்குப் பொருந்தாது.  எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதே இப்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பெரும் பிரச்சினையாகும்.   ஜனாதிபதி, ஐ.தே.கவுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திச் செல்ல விரும்புவதாக இருந்தால், எவரும் புதிய பிரதமர்களைத் தேடவோ, ஐ.தே.க தனியாக ஆட்சி நடத்துவதாகக் கூறவோ தேவையில்லை.  

 ஜனாதிபதியும் பிரதமரும் பழையபடி ஆட்சியை நடத்திச் செல்லலாம். ஆனால், ஜனாதிபதி அதை, ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.   கடந்த காலங்களில், ஐ.தே.க ஜனாதிபதியைப் புறக்கணித்துப் பல முடிவுகளை எடுத்திருந்தது. அதுவே, ஜனாதிபதி தம்மைப் பதவியில் அமர்த்திய, ஐ.தே.கவை வெறுக்கக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது.   இது, ஐ.தே.க இதற்கு முன்னர், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்திலும் நடந்து கொண்ட முறையாகும். அக்காலத்தில் புலிகளுடனான போர் நிறுத்த உடன்பாட்டையும் அரசமைப்பின் பிரகாரம் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதியைப் புறக்கணித்தே செய்து கொள்ளப்பட்டது.   அக்காலத்திலும், ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டு, ரவி கருணாநாயக்க போன்ற சில ஐ.தே.க தலைவர்கள் ஒருவித மமதையுடனேயே செயற்பட்டனர். அன்று, சந்திரிகா, ஐ.தே.க அரசாங்கத்தை அதன் பதவிக் காலம் முடிவடையும் முன் கலைக்க, அதுவே காரணமாக அமைந்தது.  

 

Photos
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend