Home Members செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் நிகழ்வுகள் அதிசயசெய்திகள் ஜோதிடம் Photos More
 
Description
தற்கொலைக் குண்டு அங்கியும் வெடிபொருட்களும் யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட செய்தியானது அரசாங்கத்துக்கு எதிரான அரசியல்வாதிகளை உரத்துப் பேச வைத்திருக்கிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தை விட்டு முற்றாகவே கை நழுவிப் போய் விட்டதென்ற தோரணையில் மஹிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

ஆட்சிப் பொறுப்பை மீண்டும் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைத்து விடுமாறும், நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை கோத்தபாயவிடம் வழங்குமாறும் அண்மைய தினங்களாக குரலெழுப்பி வருகின்ற மஹிந்த அணியினருக்கு, சாவகச்சேரி பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியானது எத்தனை வாய்ப்பாக இருந்திருக்குமென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த விடயத்தில் மிகக் காரசாரமான கருத்துகளை வெளியிட்டவராக முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் காணப்படுகிறார்.

சாவகச்சேரி பகுதியில் தற்கொலைக் குண்டு அங்கியும் கிளேமோர்களும் மீட்கப்பட்டதாக நேற்று முன்தினம் செய்தி வெளியாகியதே தவிர, அவ்விவகாரம் குறித்த விசாரணையின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலெதுவும் அன்றைய தினம் வெளியாகியிருக்கவில்லை.

தற்கொலை அங்கியும் ஏனைய ஆயுதங்களும் முன்னைய யுத்த காலத்துக்குரியவையா, இப்பொருட்கள் அங்கு வந்து சேர்ந்தது எவ்வாறு என்பது போன்ற விடயங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

ஆனாலும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் அன்றைய தினமே ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் அரசுக்கு எதிரான கருத்துகளை கடும் தொனியில் வெளிப்படுத்தினார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், கொழும்புக்குக் கொண்டு வரப்படவிருந்த வெடிபொருட்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் எதுவித உறுதிப்பாடுகளுமின்றி கருத்து வெளியிட்டுள்ளார் பேராசிரியர் பீரிஸ்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், சட்டத்துறையில் பெரும் மேதையெனக் கருதக் கூடியவருமான அவர், குற்றவியலுடன் தொடர்புடைய விவகாரமொன்றை அரசியல் தேவைக்காக எத்தனை தூரம் பொறுப்பற்ற விதத்தில் எழுந்தமானதாகக் கையாள்கிறாரென்பதை இலகுவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

பேராசிரியரின் கருத்துகளுக்குப் பின்னால் மறைந்திருக்கின்ற காரணங்களை ஊகித்துக் கொள்வது கடினமானதொன்றல்ல.

புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து தலையெடுக்கத் தொடங்கியிருப்பதாக தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்கு முற்படுகின்ற மஹிந்த அணியினருக்கு, சாவகச்சேரி ஆயுத மீட்புச் செய்தியானது வாய்ப்பானதொன்றாகும்.

பேராசிரியரின் கருத்துகளும் அதற்கு ஏதுவானதாகவே அமைந்திருக்கின்றன.

சிங்கள மக்களை எழுச்சிக்கு உள்ளாக்கக் கூடியது புலிகள் தொடர்பான பீதியும் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

2009 ல் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதாக உத்தியோக பூர்வமாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. எனினும்  கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் காலம் வரை முன்னைய அரசாங்கம் புலிகள் தொடர்பான புரளியிலும் இனவாதத்திலுமே அரசியலை நடத்தி வந்துள்ளது.

கடந்த வருட ஜனவரியில் பறி போன ஆட்சியை மீண்டும் கைப்பற்றிக் கொள்வதற்காக மஹிந்த தரப்பினர் அன்றைய பாதையையே இப்போதும் பின்பற்றுகின்றரென்பது மறைமுகமானதல்ல.

அதே சமயம் சாவகச்சேரி மறவன்புலவில் தற்கொலை அங்கியும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமானது, அரசுக்கு எதிரான சக்திகளால் தென்னிலங்கையில் பாரதூரமாகக் கையாளப்படலாமென்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி நேர்மையுடன் சிந்திக்கக் கூடிய சிங்கள மக்களிடமும் உண்டு.

வடக்கு, கிழக்கு மக்களின் சுமுகமான வாழ்வுக்கு வழி செய்யும் வகையில் அங்குள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு, வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கம் உருவாகி வருகின்ற இவ்வேளையில், ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவமானது தெற்கில் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றதென்பதை ஊகித்துக் கொள்ள முடியாதிருக்கிறது.

மஹிந்த தரப்பு அணியினர் தென்னிலங்கையில் முன்னெடுத்து வருகின்ற அரசுக்கு எதிரான பிரசாரங்களில் தேசியப் பாதுகாப்பையே பிரதானமாக முன்னிலைப்படுத்துகின்றனர்.

வலி வடக்கு மற்றும் சம்பூர் பகுதியில் படை முகாம்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருவதற்கு அவர்கள் கடுமையான எதிர்ப்பை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

மறவன்புலவு பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட செய்தி அறிந்ததும், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ச எம்.பியும் உடனடியாகவே காரசாரமான கருத்துகளை வெளியிட்டதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் சாத்தியம் தென்படுவதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தவறானதெனவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைக்கக் கூடாதெனவும் நாமல் ராஜபக்ச கூறியிருக்கிறார்.

எதிர்த் தரப்பிலிருந்து வருகின்ற கருத்துகளையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்குமிடத்து ஒரு விடயம் தெளிவாகவே எமக்குப் புலப்படுகிறது.

மஹிந்த அணியினர் தங்களது அரசியல் இலக்கை அடைவதற்காக சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட விவகாரத்தையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

புலிகள் தொடர்பான பீதியை முன்வைப்பதன் மூலம் தென்னிலங்கை மக்களை வசீகரிப்பதற்கு அவர்கள் முற்படுகின்றனர்.

அதேசமயம் வடக்கு, கிழக்கில் படை முகாம்களை தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்திருப்பதன் மூலம் இன்றைய அரசின் மீது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு வெறுப்பை உருவாக்கலாமெனவும் அவர்கள் எண்ணுகின்றனர்.

அதிகார மோகம் அவர்களை எத்தனை கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதென்பதையே இவையெல்லாம் புலப்படுத்துகின்றன.

Location
Photos
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend